சனி பெயர்ச்சி எப்போது? எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு?? பரிகாரம் என்ன???
நடப்பு ஆண்டுக்கான சனிபெயர்ச்சி எப்போது, எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு, அவற்றுக்கான பரிகாரம் என்ன என்பதை விளக்குகிறது இந்த செய்தி...
பொதுவாக வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என இரண்டு வகையான பஞ்சாங்கம் கடைபிடிக்கப்படுகிறது. பெரும்பாலான கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கப்படியே நிகழ்ச்சிகள் நடத்தப்பபடுகின்றன. வீடுகளில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு திருக்கணித பஞ்சாங்கம் பரவலாக பார்க்கப்படுகிறது.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜனவரி 24 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. ஆனால், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி பார்க்கும் போது டிசம்பர் 27 ஆம் தேதி தான் சனிபெயர்ச்சி நடைபெற இருக்கிறது. எனவே நடப்பு ஆண்டில் சனிப்பெயர்ச்சி ஜனவரியிலா அல்லது டிசம்பரிலா என்று குழப்பம் நிலவுகிறது.
வழக்கமாக இரு பஞ்சாங்கத்திலும் 5 அல்லது 10 நாட்கள் தான் இடைவெளி இருக்கும். ஆனால் இந்த முறை தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனி பெயர்ச்சி நடைபெறுவதால் இரு பஞ்சாங்கத்திற்கும் 11 மாத இடைவெளி ஏற்படுவதாக ஜோதிடர்கள் விளக்கம் அளித்தனர்.
திருக்கணித பஞ்சாங்கப்படி வெள்ளிக்கிழமை காலை 9.45 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. அதன்படி, தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி காரணமாக பாதிப்புகள் இருக்கும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கு பரிகாரமாக திருநள்ளாறு, காக்கலூர் சனிபகவான் கோவில்களுக்கு சென்று வரலாம் என்றும், சாதத்தில் எள் வைத்து காகத்திற்கு படைக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் பரிகார சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று தகவல் பரவிய நிலையில், கோவில் நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. வாக்கியப் பஞ்சாங்கப்படி டிசம்பர் 27 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி ஆரம்பமாவதால், அன்றைய தினம் தான் சிறப்பு பரிகார பூஜை நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Comments