கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமான சீன நகருக்கு சீல்..!
கொரோனா வைரஸ் பரவுவதலை தடுக்க, அந்த வைரஸ் நோய் தொற்று முதலில் கண்டறியப்பட்ட ஊகான் நகருக்கான சகல போக்குவரத்துகளையும் சீன அரசு ரத்து செய்துள்ளது. அந்த நகரைச் சேர்ந்தவர்கள் யாரும் ஊரை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, ஊகானுக்கு செல்ல அனுமதி இல்லை என்றும் சீன அரசு அறிவித்துள்ளது.
சீனாவின் ஊகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் காய்ச்சலால் இதுவரை 17 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் 550 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக சீனா அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், தாய்லாந்து நாடுகளிலும் கொரோனா நோய் பரவி உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து ஊகான் நகரை சீன அரசு தனிமைப்படுத்தி உள்ளது.
அந்த நகருக்கு செல்லும் தரைவழி, வான் வழி, மற்றும் நீர் வழி போக்குவரத்தை சீன அரசு முடக்கி உள்ளது. சீனாவில் எந்த ஊரில் இருந்தும் ஊகானுக்கு யாரும் செல்லக்கூடாது என்றும், ஊகானில் உள்ள யாரும், அந்த ஊரை விட்டு வெளியேறக்கூடாது என்றும் சீன அரசு தடை விதித்துள்ளது. இன்று காலை 10 மணி முதல் தடை அமலுக்கு வந்துள்ளதாகவும், ஊகான் நகர மக்கள் வீதிகளிலோ, பொது இடங்களிலோ நடமாடும் போது முகமூடிகள் அணிந்து கொள்ள வேண்டும் என்றும், அந்த நகர நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ் குறித்த எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ளது. இதன் படி, 'கொரோனா வைரஸ்' குடும்பத்தில் இருந்து, உருவாகியுள்ள வைரசான 'என்.சி.ஓ.வி.,-2019' என்பதான் தற்போது பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் கடல் உணவு விற்பனை சந்தையில், 'கொரோனா' வைரஸ் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது என்றும், மனிதர்களிடம் இருந்து இருமல் மற்றும் தும்மல் மூலம் மற்ற மனிதர்களுக்கு பரவுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால்,
* தொடர் காய்ச்சல்
* தலைவலி
* தொண்டை வலி
* மூக்கு ஒழுகுதல், இருமல்
* மூச்சுத் திணறல்
* வயிற்றுப் போக்கு
* கிட்னி செயலிழப்பு, இறுதியில் மரணம் நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நோய்க்கு என்று தடுப்பு மருந்து தற்போது இல்லை என்றும், நன்றாக கை கழுவுதல், இருமல், தும்மல் வரும் போது வாய், மூக்கை துணியால் மூடுதல் ஆகியவற்றின் மூலம் நோய் தொற்றாமல் தடுக்கலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments