எச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு
நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் எச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விநாயகர் சதுர்த்தி விழா மேடைக்கு உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி மறுத்தது.
அதற்கு கண்டனம் தெரிவித்த எச்.ராஜா, நீதிமன்றத்தை அவதூறாகப் பேசியதாக பதிவான வழக்கு, திருமயம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் தானாக விசாரணைக்கு ஏற்ற வழக்கு எச்.ராஜா மன்னிப்பு கோரியதால் முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் திருமயம் காவல் நிலைய வழக்கில் விசாரணையை முடித்து எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதே தவறை வேறு யாராவது செய்திருந்தால் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பார்கள் என்றும், எச்.ராஜா மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் என்பதால் காவல்துறை தயங்குவதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, 2 மாதங்களில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய திருமயம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Comments