கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீடு...

0 783

அதிமுக அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சியால் தமிழகம் தொழில் துறையில் சிறந்த மாநிலமாக திகழ்கிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் உதவியுடன், டிஎல்எஃப் நிறுவனம், சென்னை தரமணியில் டி.எல்.எஃப். டவுன் டவுன் (DLF Down town) என்ற பெயரில், டைடல் பூங்கா போன்ற, வர்த்தக ரீதியிலான பணி அமைவிட செயல்திட்டத்தை 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட உள்ளது. நவீன தொழில்நுட்பத்திலான கட்டிடங்கள், சாலைகள் என பல்வேறு நவீன வசதிகளோடு 27 ஏக்கர் பரப்பளவில், 68 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இரண்டு கட்டங்களாக கட்டுமான பணிகள்  நடைபெறவுள்ள நிலையில், முதல் கட்டத்தில் 25 லட்சம் சதுர அடி பரப்பளவிலான கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், தொழில் துறையில் தமிழகம் சிறந்து விளங்க அதிமுக அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் ஈர்க்கப்பட்டுள்ள முதலீடுகள், அதன் மூலம் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்கள் மற்றும் உருவாகும் வேலைவாய்ப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை தெரிவித்தார்.

தூத்துக்குடியில் 49 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூலம் தமிழகத்தின், தென் மாவட்டங்கள் வளர்ச்சிப்பெறும் என முதலமைச்சர் கூறினார். மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலை, போன்ற செயல்படாத நிறுவனங்கள் தமிழக அரசின் முயற்சியால் புத்துயிர் பெறுவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் சென்னை என்று சொல்லும் அளவிற்கு, பல புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

டைடல் பூங்கா போல, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்காக டிட்கோவும், டி.எல்.எப். நிறுவனமும் கூட்டாக பெரிய கட்டிடத்தை ஏற்படுத்துவதாக முதலமைச்சர் கூறினார். இதன் மூலம் 70 ஆயிரம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments