ராமநாதபுரம் அருகே நாசவேலையில் ஈடுபட முயன்ற 3 பேர் கைது...
ராமநாதபுரத்தில், பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டியதாக கூறி, கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில், புஹாரியா பள்ளி மைதானம் அருகே, சிலர் கூடி, நாச வேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசாரிடம் 3 பேர் சிக்கிய நிலையில் ஒருவர் தப்பியோடிவிட்டார்.
கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கீழக்கரை பகுதியை சேர்ந்த புறாக்கனி என்கிற பிச்சைக்கனி, கடலூர் மாவட்டம் கோண்டூர் காலனி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்கிற முகமது அலி, விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரம் மணமேடு பகுதியைச் சேர்ந்த சொர்ண அருண்குமார் என்கிற முகமது அமீர் என்பது தெரியவந்தது.
தப்பியோடிய தேவிபட்டினத்தைச் சேர்ந்த ஷேக் தாவூது ஏற்கனவே, தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் இருந்து வருகிறார் என்று கூறப்படுகின்றது.
களியக்காவிளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய அப்துல் ஷமீமுக்கு பணம் அனுப்பிய புகாரில் சிக்கியுள்ள கீழக்கரை முகமது ரிபாஸ் என்பவரோடு, இந்த மூன்று பேருக்கும் தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
கைதான 3 பேரின் செல்போன்களை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, வாட்ஸ் அப் மூலம், இளைஞர்களை தொடர்பு கொண்டு, மூளைச்சலவை செய்து நாச வேலைகளில் ஈடுபட தூண்டியது தெரியவந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர்கள் ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவான கருத்துகளை பரப்பியதாக கூறப்படும் ஆடியோக்களையும், பல்வேறு ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றியதாக சொல்லப்படும் நிலையில், 3 பேர் மீதும் 7 பிரிவுகளின் கீழ், தேவிப்பட்டினம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் மூவரும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தப்பியோடிய ஷேக் தாவூதை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Comments