ஜல்லிக்கட்டு காளையுடன் மல்லுக்கட்டிய கைபுள்ளைகள்..! புரட்டி எடுத்த மஞ்சுவிரட்டு

0 2319

பொங்கல் பண்டிகையையொட்டி அரசின் விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் சிறப்பாக நடந்த நிலையில், மஞ்சு விரட்டில் கட்டவிழ்க்கப்பட்ட காளைகளிடம் சிக்கிய சிலர் சாமர்த்தியமாக தப்பினாலும், ஆர்வமிகுதியால் காளைகளிடம் சிக்கிய கைப்புள்ளைகளின் பரிதாப காட்சிகள் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

பூமி அதிர புயல்போல வந்து மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் தனது கழுத்தில் கட்டப்பட்ட பட்டுதுணியையும் தங்க சங்கிலியையும் அவிழ்க்க முயன்ற வீரர்களை குத்தி தெறிக்கவிட்டன..!

சினம் கொண்ட மஞ்சு விரட்டு காளையிடம் சிக்கிய மல்லு வேட்டி மைனராக இருந்தாலும் சரி, மாருதி காராக இருந்தாலும் சரி இங்கே பஞ்சர் தான்..!

கருவேலங்காட்டிற்குள் பதுங்கி நிற்கும் காளையிடம் பம்மிச்சென்று பட்டுத்துணியை அவிழ்க்க முயன்ற பாசாங்கு வீரரை இறகு பந்து போல பறக்கவிட்டது இந்த முரட்டு காளை..!

தன்மானத்தை இழக்காமல் காளையுடன் கட்டிப்புரளும் இந்த வீரரை, தக்க நேரத்தில் கூடி நின்றவர்கள் காளையை திசை திருப்பி காப்பாற்றினர்... இல்லையென்றால், இவர் மதியம் என்ன சாப்பிட்டார் என்பதை வயிற்றை கிளரி காளை பதம் பார்த்திருக்கும்..!

வடமாடு மஞ்சுவிரட்டு ஒன்றில், போக்கு காட்டிப் பிடிக்க முயன்ற வீரரை குத்தி ரத்தத்துடன் ஓடவிட்டது காளை...

மஞ்சுவிரட்டில் மாடு பிடிக்க போகும் மாவீரர்களையே தூக்கி வீசி மண்ணை கவ்வவிட்ட நிலையில், வேடிக்கை பார்க்க போன கைபுள்ளை ஒன்றை அங்க பிரதட்சணம் செய்ய வைத்தது ஒரு காளை..!

நாய்க்கு பயந்து பேயிடம் தஞ்சம் புகுந்தது போல கருப்பு காளைக்கு பயந்து உருண்டு வந்து சிக்கிய கைபுள்ளையை, தனது இடது காலால் டீல் செய்தது படுத்திருந்த அந்த காளை..!

மஞ்சு விரட்டின் போது காளையை சீண்டிவிட்டு உருளை குழாய்க்குள் புகுந்து நெருப்பு கோழி போல தலையை மறைந்து கொண்டால் மாடு முட்டாது என்பது முட்டா நம்பிக்கை என தனது கொம்புகளால் முட்டி காட்டியது இந்த குறும்பு காளை..!

சாதாரணமாக தடுப்பு கம்புகள் கட்டி நடத்தப்பட்ட மஞ்சு விரட்டில் பங்கேற்ற இந்த முரட்டு காளை தன்னை ஓடவிட்டு வேடிக்கை பார்த்த மாப்பிள்ளை காளையர்களை மிரண்ட ஓட வைத்தது.

தடுப்பு கொம்பில் பாதுக்காப்பாக இருப்பதாக நினைத்திருந்தவரை நொடிப்பொழுதில் தரையில் விழச்செய்தது.

மஞ்சுவிரட்டில் கட்டவிழ்க்கப்பட்ட காளையை கால்களால் கட்டுப்படுத்த நினைத்தால் கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும்.

அதே போல ரேக்ளா ரேசில் சாலையை விட்டு விலகிச்சென்ற மாட்டு வண்டி மின்கம்பத்தில் மோதி நொறுங்கி போனது..!

கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த மஞ்சுவிரட்டின் போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ காட்சிகள் டிக்டாக், முக நூல் மற்றும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழர்களின் பாரம்பரியத்தையும், வீரத்தையும் உரக்க சொல்லும் ஜல்லிக்கட்டு போன்று மஞ்சுவிரட்டையும் தக்க விதிமுறைகளுடன் பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்பதே இந்த காட்சிகளை பார்போரின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments