சீனாவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 17 பேர் உயிரிழப்பு...

0 1276

சீனாவில் பரவி வரும் கரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 ஐ தாண்டியுள்ளது.

சீனாவின் உஹான் (Wuhan ) பகுதியில் கரோனா எனும் புதிய வைரஸ் பரவியிருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

வூஹான், பெய்ஜிங், ஷாங்காய், ஹெனான், தியான்ஜின், ஜேஜியாங் ஆகிய பகுதிகளிலும் கரோனா வைரஸால் 500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. வேறு சில மாகாணங்களிலும் கரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வூகான் பகுதியிலிருந்து ஏனைய பகுதிகளுக்கு கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இன்று முதல் அங்கு போக்குவரத்து முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் பேருந்துகள், படகுகள், நீண்டதூரப் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்படும் என வூகான் மாகாண அரசு தெரிவித்துள்ளது. விமானநிலையம் மற்றும் ரயில் நிலையமும் தற்காலிகமாக மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவைகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. முக்கிய காரணங்கள் இல்லாமல் பொதுமக்கள் வூகானை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், பொதுவெளிக்கு வரும் போது கண்டிப்பாக முகமூடி அணிந்துதான் வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேற்கண்ட நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா வைரசை சர்வதேச பொது சுகாதார நெருக்கடியாக அறிவிக்க உலக சுகாதார அமைப்பின் அவசரக் கூட்டம் ஜெனீவாவில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், கரோனா வைரஸ் குறித்த கூடுதல் விவரங்கள் அளிக்கப்பட்டால் மட்டுமே பொது சுகாதார நெருக்கடியாக அறிவிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இன்று மீண்டும் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். 

தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான், தைவான் ஆகிய 4 நாடுகளிலும், அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டனை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் எவரெட்டிலுள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், பல்வேறு விமான நிலையங்களில் சீனாவிலிருந்து திரும்பும் பயணிகளை பரிசோதிக்க கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் 6வது நாடாக மெக்ஸிகோவிலும் கரோனா வைரசால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கரோனா வைரசால் வூகான் பகுதியில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழப்பு எண்ணிக்கையை சீனா மறைப்பதாகவும், 479 பேர் வரை இறந்திருக்கக் கூடும் என்றும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே அத்தியாவசியப் பயணம் தவிர, வூகான் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தன் நாட்டு மக்களுக்கு இங்கிலாந்து அறிவுறுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments