விண்வெளிக்கு மனித வடிவ ரோபோவை அனுப்புகிறது இஸ்ரோ.... பணிகள் தீவிரம்
நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தும் என்று அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் ககன்யான் திட்டத்தின் முன்னோடியாக மனித வடிவ ரோபோவை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், ககன்யான் திட்டம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் மட்டும் அல்ல என்றார். நீண்டகால தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான கட்டமைப்பினை உருவாக்கும் வாய்ப்பினை இந்த திட்டம் இந்தியாவுக்கு வழங்கும் என்று அவர் கூறினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ககன்யான் திட்டத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன என்றார். 1984 ஆம் ஆண்டு இந்திய வீர ர் ராகேஷ் சர்மா ரஷ்யா ராக்கெட்டில் விண்வெளிக்கு சென்றதாகவும், இப்போது இந்திய வீரர்கள் நான்கு பேர், சொந்த நாட்டின் ராக்கெட்டில் விண்வெளிக்கு சென்று திரும்ப உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
சந்திரயான் 3 திட்டத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக கூறிய அவர், நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் இஸ்ரோ செயல்படுத்த உள்ளது என்றார்.
இதனிடையே பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு இஸ்ரோவின் ககன்யான் திட்டம் குறித்து விளக்கப்பட்டது. அப்போது மனித வடிவிலான எந்திர பெண்ணையும் விஞ்ஞானிகள் அறிமுகம் செய்தனர்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முன்னர், முதற்கட்டமாக மனித வடிவில் உருவாக்கப்பட்டுள்ள வயோம் மித்ரா என்ற ரோபோவை அனுப்ப உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி சாம் டயல் கூறினார். மனித உடலின் பெரும்பாலான இயக்கங்களை இந்த ரோபோ கொண்டிருக்கும் என்றும், விண்வெளியில் மனித உடலில் நிகழும் மாற்றங்களை இந்த ரோபோ பதிவு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வரும் டிசம்பர் மாதம் விண்வெளிக்கு ரோபோவை அனுப்பி, அதனை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதன் மூலம், அடுத்து மனிதர்களை அனுப்பும் போது என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments