குடியுரிமை திருத்த சட்டம்: இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், அதன்மீதான விசாரணையை 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் அகதிகளாக குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பெளத்த மதத்தினர் உள்ளிட்ட அந்நாடுகளின் மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அண்மையில் இயற்றியது.
அந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 140க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில் பெரும்பாலான மனுக்களில், குடியுரிமை திருத்த சட்டத்தை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், 140 மனுக்கள் வரை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் 60 மனுக்கள் மட்டுமே அரசிடம் அளிக்கப்பட்டிருப்பதால், பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த விவகாரம் குறித்து அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெறுவதை கருத்தில் கொண்டு, 2 முதல் 3 மாதங்கள் வரை குடியுரிமை வழங்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கை ஏப்ரல் மாதம் நடைபெற இருப்பதாகவும், அதை ஒத்திவைக்கும்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான இன்னொரு மூத்த வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், மத்திய அரசின் வாதத்தை கேட்காமல் இடைக்கால தடை விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.
அவரின் வாதத்தை ஏற்றுக் கொள்வதாக கூறிய தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, மத்திய அரசின் வாதத்தை கேட்காமல், இடைக்காலத் தடை விதிக்கப்பட மாட்டாது என உறுதியளித்தார்.
இதன்பின்னர் மனுக்கள் மீது பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு 4 வாரங்கள் கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக வழக்குகள் தொடுக்கப்பட்டால், அதை விசாரிக்க வேண்டாம் என்றும் உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மனுக்கள் மீதான விசாரணையை 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவதாக கூறிய நீதிபதிகள், சட்டத்தின் மீது இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமா என்பது குறித்து அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும் என அறிவித்தனர்.
Comments