எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு - என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் உபா சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கை தேசியப் புலனாய்வு அமைப்புக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவ்பீக் என்ற இருவர் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அளித்த தகவல்களின் பேரிலும், போலீசாரின் தொடர் விசாரணையின் பேரிலும் வில்சன் கொலையில் தொடர்புடைய தீவிரவாதிகள் உள்ளிட்ட பலரை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்த வழக்கில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டமான உபா (UAPA) சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
களியக்காவிளை சோதனை சாவடியில் பணியிலிருந்த எஸ்.ஐ.வில்சனை சோதனை சாவடி வழியாக ஆயுதங்களைக் கடத்தும் திட்டத்துடன் தவுபீக்கும், சமிமும் சுட்டுக் கொன்றிருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே இந்த வழக்கை சக்தி வாய்ந்த புலனாய்வு அமைப்பான தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிப்பது உகந்ததாக இருக்கும் என்பதால் வில்சன் கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
Comments