விமான நிலையங்களில் ஜாக்கிரதை - கொரோனாவைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்
கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்க சென்னை விமான நிலையத்திலும் பயணிகளுக்கு, தெர்மல் ஸ்கிரீனிங் எனப்படும் வெப்பசார் உடல் பரிசோதனை நடத்தப்படுகிறது.
சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்திய அரசும் சீனாவுக்கு செல்லும் இந்திய பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்நாட்டில் நோய் தோற்று உள்ளவர்கள், சளி தொந்தரவு உள்ளவர்கள் ஆகியோருடன் நெருங்கி பழக வேண்டாம் என்றும், சீனாவில் இருக்கும் போது காய்ச்சல்,சளி தொந்தரவு ஏற்பட்டால் உடனே மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், இந்தியாவுக்கு விமானத்தில் பயணிக்கும் போது நோய் தொற்று அறிகுறி இருந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என்றும் அரசு எச்சரித்து உள்ளது.
மேலும் நோய் பரவ வாய்ப்புள்ள பண்ணைகளுக்கோ, ஆடு மாடு வெட்டப்படும் சந்தைகளுக்கோ செல்ல வேண்டாம் என்றும் அரசு எச்சரித்துள்ளது. சரியாக வேக வைக்கப்படாத மாமிச உணவுகளை சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சீனாவில் இருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கு விமான நிலையங்களிலேயே மருத்துவ பரிசோதனை நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதன் படி சென்னை விமான நிலையத்தில், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனையை மத்திய சுகாதாரத்துறை தொடங்கி உள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு ஹாங்காங்கில் இருந்து ‘கேத்தே பசிபிக்’ என்ற நிறுவனம் ஒரேஒரு விமான சேவையை மட்டுமே நடத்துகிறது.
தினமும் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை வந்துவிட்டு, மீண்டும் அதிகாலை 2 மணிக்கு அந்த விமானம் ஹாங்காங் புறப்பட்டு செல்லும். அந்த விமானத்தில் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த சென்னை விமானநிலையத்தில் உள்ள மத்திய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வருகை பகுதியில்,பயணிகள் விமானத்தை விட்டு இறங்கி, குடியுரிமை சோதனைக்கு செல்வதற்கு முன்னதாக உள்ள இடத்தில் 3 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மருத்துவர் தலைமையில் 6 மருத்துவ உதவியாளர்கள் அங்கு பணியில் உள்ளனர். ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு 12.25 மணிக்கு வந்த 368 பயணிகளுக்கு சிறப்பு மையங்களில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
ஒவ்வொரு மையத்திலும் ஒரு கருவி பொருத்தப்பட்டு, பயணிகள் ஒவ்வொருவராக அந்த கருவி முன்பு வாய் மூலம் ஊத அறிவுறுத்தப்பட்டனர். அந்த கருவிவுடன் இணைக்கப்பட்ட கம்ப்யூட்டரில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்து தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது.
பயணிகள் அனைவரும் நல்ல உடல் நிலையில் உள்ளனர் என்பதை தெர்மல் ஸ்கிரீனிங் எனப்படும் வெப்பசார் உடல் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தினர். இதன் பின்னரே பயணிகள் குடியுரிமை சோதனைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த மருத்துவ பரிசோதணை டெல்லியில் உள்ள மத்திய சுகாதாரத்துறையிடமிருந்து மறுஉத்தரவு வரும்வரை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments