மானிய விலையில் கையடக்க அறுவடை இயந்திரம்..!
நெல் அறுவடைப் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில், தமிழக அரசு 50 விழுக்காடு மானிய விலையில் அறிமுகம் செய்த, குறைந்த எடையிலான, கைகளால் இயக்கப்படும், நெல் அறுவடை எந்திரம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட, மேல வயலூர், சோமரசம்பேட்டை, அல்லித்துறை உள்ளிட்ட ஊர்களில், 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம் போலவே நடப்பாண்டும் ஆட்கள் பற்றாக்குறை விவசாயிகளுக்கு ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது.
கைகளால் நெல் அறுப்பதற்கு ஆட்கள் கிடைப்பதும் அரிதாக இருப்பதால், கூலியும் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கனரக நெல் அறுவடை எந்திர சக்கரங்கள் சேற்றில் சிக்கிக்கொள்வதும், குறுகலான இடங்களில் எந்திரம் சென்று வருவது போன்ற பிரச்சனைகள் இருப்பது ஒரு பக்கம் என்றால் ஏக்கர் ஒன்றுக்கு அறுவடைக் கூலி 3 ஆயிரத்தை தாண்டுவதாகக் கூறுகின்றனர் விவசாயிகள்.
இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வாக அயல்நாடுகளில் பயன்படுத்தப்படும் சிறிய ரக கை அறுவடை எந்திரத்தை மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி ஜெர்மன் தயாரிப்பில் மிகக்குறைந்த எடையிலான இந்த எந்திரத்தை தமிழ்நாடு வேளாண் பொறியியல்துறை, விவசாயிகளுக்கு 50 விழுக்காடு மானியத்தில் வழங்கி வருகிறது. அதாவது 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இந்த எந்திரம் தமிழக அரசால் 15 ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
தனி நபர் ஒருவர் கைகளில் இந்த எந்திரத்தை பிடித்து வயலில் நடந்து சென்றால் நெற்கதிர்கள் அறுக்கப்பட்டு, கீழே தனியாக விழுந்துவிடும்.
அறுவடை செய்த பயிர்களை எளிதில் கட்டுகளாக கட்டி எடுத்துச் செல்லலாம். ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் பயன்படுத்தி 2 மணி நேரம் வரையில் இந்த எந்திரத்தை இயக்க முடியும் என்று கூறுகின்றனர் விவசாயிகள்.
அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ள சமயத்தில் அரசு இந்த எந்திரத்தை மானிய விலையில் வழங்குவது, தங்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். நெல் அறுவடை மட்டுமல்லாது, களை வெட்டுதல், புல் வெட்டுதல், புதர்கள், சிறிய மரங்களை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவசாய பணிகளையும் இந்த எந்திரம் மூலம் மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
தற்சமயம் திருச்சி சுற்றுவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த எந்திரம், அதற்கான வரவேற்பைப் பொறுத்து தமிழகம் முழுவதும் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த எந்திரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்துவிட்டால் நிச்சயம் இது விவசாயிகளுக்கு வரப்பிரசாதமே.....
Comments