நிறைவடைந்தது புத்தகத் திருவிழா

0 606

சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியை 13 லட்சம் பேர் பார்வையிட்ட நிலையில், 20 கோடிக்கு ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ ((YMCA)) மைதானத்தில் அறிவு சார் திருவிழாவான 43வது புத்தக கண்காட்சி, கடந்த 9ம் தேதி தொடங்கியது. 750 அரங்குகள், பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள், வாசகர்கள் எழுத்தாளர்களுடன் உரையாட முற்றம் அறை, புத்தக வெளியீட்டு மேடை, 3 ஆயிரம் சதுரஅடியில் தொல்குடி தமிழர் நாகரிக வரலாற்றை பறைசாற்றும் கீழடி - ஈரடி அரங்கு, மணலில் வடிவமைக்கப்பட்ட வள்ளுவர் உருவம் என பல்வேறு ஏற்பாடுகளுடன் களைகட்டிக் காணப்பட்டது இந்த புத்தகக் காட்சி.

 இயற்கை வேளாண், உயிரினங்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்ட காக்கை கூடு, இயல்வகை போன்ற அரங்குகளும், புத்தகம் கொடுத்து புத்தகம் எடுத்துக்கொள்ள அமைக்கப்பட்ட லிட்ஸ் மீட் ((LITS)) அரங்கும் வாசகர்களிடையே தனி கவனம் பெற்றன.

 புத்தகக் காட்சியின் தனித்த அடையாளமாக திகழ்ந்த, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கீழடி - ஈரடி என்ற அரங்கில் 24 மொழிகளில் கிடைக்கப்பெற்ற கீழடி அகழ்வாராய்வு குறித்த புத்தகம் 20 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது.

 வாசகர்கள்- எழுத்தாளர் சந்திப்புக்கு மையமாக இந்த இடம் விளங்கியதாகவும், இளைஞர்கள் பெருமளவில் வருகை தந்ததாக பபாசி தலைவர் சண்முகம் தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் புத்தகக் காட்சியை காண வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

 புத்தகக் காட்சியை 13 லட்சம் பேர் பார்வையிட்டதாகவும், 60 லட்சம் புத்தகங்கள் விற்பனையானதாகவும் கூறியுள்ள பபாசி, இதன்மூலம் 20 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. படிக்கும் பழக்கம் குறைந்து வந்தாலும், வாசிப்பின் சுவை அறிந்த பலரும் இன்றும் அதைத் தொடர்ந்து வருகின்றனர். நண்பனாகவும், வழிகாட்டியாகவும் விளக்கும் புத்தகப் படிப்பின் சுவையை இளைஞர்கள் அதிகளவில் உணர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு...

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments