உண்மையை பேசியதால் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது - ரஜினிகாந்த் திட்டவட்டம்
1971-ஆம் ஆண்டு சேலம் திராவிடர் கழகப் பேரணியில் ராமர் - சீதை உருவங்கள் ஆடையில்லாமல் கொண்டு வரப்பட்டதாக செய்தி வெளியான பத்திரிகை ஆதாரத்தை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், தான் உண்மையையே பேசியதாகவும் அதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
துக்ளக் பத்திரிகையின் பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் 1971, ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பேரணியின் போது ராமர், சீதையின் உருவங்கள் ஆடையில்லாமல் கொண்டுவரப்பட்டதாகப் பேசியிருந்தார்.
ரஜினி 1971ம் ஆண்டு நடைபெறாத ஒரு விஷயத்தை பேசியுள்ளதாக திராவிட இயக்கங்களை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பெரியார் குறித்து ரஜினி அவதூறாக பேசியதாக தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் பெரியார் குறித்து பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்கத் தவறினால் அவர் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் சில அமைப்புகள் அறிவித்தன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, திராவிடர் கழகப் பேரணியில் ராமர் - சீதை உருவங்கள் ஆடையில்லாமல் கொண்டு வரப்பட்டதாக ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி ஆதாரத்தை வெளியிட்டார். அவற்றின் அடிப்படையிலும், தான் கேள்விப்பட்ட விஷயங்களையும் வைத்து உண்மையையே பேசியதாகவும் அதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மூட நம்பிக்கைக்கு எதிராக நடைபெற்ற பேரணி மீது செருப்பு மாலை வீசப்பட்டதாகவும், அந்த வரலாற்றை ரஜினி திரித்துச் சொல்வதாகவும் திராவிடர் கழகப் பேரணியின் போது களத்தில் இருந்தவர்கள் ஆதாரங்களுடன் சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்டு வருவதாக செய்தியாளர்கள் எழுப்பி கேள்விக்கு பதில் அளித்த அவர், அவர்கள் தங்களுக்கு தெரிந்ததை சொல்வதாகவும், தான் தனக்கு தெரிந்ததைச் சொல்வதாகவும் அவர் பதில் அளித்தார்.
Comments