சீனாவில் இருந்து பரவி வரும் கரோனா வைரஸ் - இந்தியாவில் முன் எச்சரிக்கை எற்பாடு

0 1468

கரோனா வைரஸ் தாக்குதல் குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறும் அனைத்து மாநிலங்களையும் மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

சீனாவில் மீண்டும் பரவி வரும் கரோனா வைரசால் நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீனாவில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகள் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் பிரீத்தி சூடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் கொரோனோ வைரசின் தாக்கம் குறித்து, சுகாதாரத்துறை உன்னிப்பாக கவனித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நோயின் தாக்கம் குறித்தும், அதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கரோனா வைரஸ் பாதிப்புடன் வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்திற்கும் பிரீத்தி சூடன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொச்சி விமானநிலையங்களுக்கு வரும் சீனர்களை தீவிரமாகக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். மேலும் சீனப் பயணிகளை தெர்மல் ஸ்கிரீன் மூலம் சோதனையிட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். 

முன்னதாக, கரோனா வைரஸ் என்பது பாலூட்டி விலங்குகள் மற்றும் பறவைகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு வகையான நோய்த் தொற்றாகும். இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இருமல், மூச்சுக் காற்று, சளி, ரத்தம் மூலமாக பிறருக்கும் அந்த பாதிப்பு பரவ வாய்ப்புள்ளது. ஒருவேளை அந்நோய்க்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளாதபட்சத்தில் தீவிர சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடக்கூடும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில்தான் கரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் இருந்தது. அப்போது அந்த வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகி நூற்றுக்கணக்கானோர்அங்கு உயிரிழந்தனர். தற்போது மீண்டும் அந்த வைரஸ் தலைதூக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments