நான் முறையா மியூசிக் கத்துகல .. என் கையை பிடித்து கற்றுக்கொடுத்தது இவர்தான்
பாடல்களுக்கு துள்ளலான இசையமைத்து வழங்க கூடிய யுவன் ஷங்கர் ராஜா, தாம் முறையாக இசை கற்று கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
இயக்குனர் அசோக் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாயநதி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி கமலா திரையரங்கத்தில் நடைபெற்றது. இந்த படத்திற்கு ராஜா பவதாரிணி இசை அமைத்துள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்று தன் சகோதரி இசையமைத்துள்ள மாயநதி திரைப்பட இசையை வெளியிட்டு பேசினார் யுவன் ஷங்கர்.
மாயநதி பட பாடல்களை தற்போது தான் கேட்டதாகவும், நான் மிகவும் புகழ்ந்தால் சகோதரியின் இசை என்பதால் புகழ்ந்தது போலாகிவிடும். இருப்பினும் இதை சொல்வதில் எங்களுக்கு பெருமையே. இசை எங்கள் ரத்தத்தில் கலந்துள்ளது என்பது மாயநதியில் பவதாரிணி இசை அமைத்துள்ளதில் இருந்து நிரூபணமாகியுள்ளது என்றார்.
மேலும் பேசிய யுவன் எனக்கு இசை தெரியாது, இசையை நான் முறையாக கற்கவில்லை. என் கையை பிடித்து பியானோவில் வைத்து இசையை கற்க உதவியது அக்கா பவதாரிணி தான். என் அண்ணா கார்த்திக் ராஜாவும், அக்கா பவதாரிணியும் பியானோ வகுப்புக்கு போவார்கள். சரி நாம் சும்மா வெட்டியாகத்தானே இருக்கிறோம் என அவர்கள் பின்னாலேயே நானும் போனேன்.
அதன் பின்னர் என்னை கவனித்த பியானோ மாஸ்டர் ஜேக்கப் ஜான், என்னை வாசிக்க சொன்னார். நான் எனது சொந்த கம்போசிங் ஒன்றை வாசித்து காட்டினேன். பின்னர் உங்களிடம் பியானோ பயில ஆசை என்று சொன்ன போது, இல்லை நீ சரியான திசையில் தான் செல்கிறாய். இன்னும் அடிப்படை மட்டும் நன்றாக தெரிந்துக்கொள் என்றார்.
பின்னர் அடிப்படையை நன்றாக பயின்றதை வைத்து இவ்வளவு நாள் ஓட்டிவிட்டேன் என்று சிரித்தபடி பேசினார் யுவன். என்னை மகிழ்ச்சியாக இசைத்துறைக்கு கூட்டி வந்தது என் அக்கா பவதாரிணி தான். அவரது இசையமைப்பில் வெளியாக உள்ள மாயநதி வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார் யுவன்.
Comments