பாஜக தலைவரானார் ஜே.பி. நட்டா..!

0 2162

பாஜக தேசிய தலைவராக ஜே.பி. நட்டா இன்று போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித் ஷா, நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் 2ஆவது முறையாக அமைந்த புதிய மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து பாஜக செயல் தலைவராக (working president)அக்கட்சியின் மூத்த தலைவர் ஜே.பி. நட்டா கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தேசியத் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடத்தப்படும் என்று பாஜக தலைமை அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி பாஜக தலைமையகத்தில் இன்று அப்பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஜே.பி. நட்டா காலையில் தாக்கல் செய்தார். அப்பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை.

இதனால் தேசியத் தலைவராக அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, தேசிய தலைவர் பொறுப்பை அவரிடம் அமித் ஷா வழங்கினார். பின்னர் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜே.பி. நட்டாவுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்தார்.

image

59 வயதாகும் ஜே.பி. நட்டா, பாட்னாவை சேர்ந்தவராவார். அவரது முழுப் பெயர் ஜேகத் பிரகாஷ்  நட்டா ஆகும். ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அவர், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவரது தீவிர பணியால், மக்களவைத் தேர்தலில் அந்த மாநிலத்திலுள்ள 80 தொகுதிகளில் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் முயற்சிகளை முறியடித்து 62 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments