தஞ்சை விமான படைதளத்தில் 6 சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானங்கள் இணைப்பு
தஞ்சையில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் சுகோய் 30 எம்.கே.ஐ. ரகத்தை சேர்ந்த 6 போர் விமானங்கள் இன்று இணைக்கப்பட்டன.
இந்திய பெருங்கடலில் சீன போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டங்கள் அண்மை காலமாக அதிகரித்து வருகின்றன. அந்தமான் கடல்பகுதியில் அண்மையில் ஊடுருவிய சீன கப்பலை இந்திய கடற்படை கண்டுபிடித்து விரட்டியடித்தது. இதுபோல நடைபெறும் எதிரி நாடுகளின் அத்துமீறல்களுக்கு பதிலடி தரவும், இந்திய பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் வலிமையை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூரில் புதுக்கோட்டை சாலையில் 1940ம் ஆண்டு வெள்ளையர்களால் கட்டப்பட்டு, பிறகு பயன்படுத்தப்படாமல் இருந்த விமானப்படை தளத்தை அதிநவீன தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்தி சீரமைத்தது. அந்த தளத்தில் 4ம் தலைமுறை போர் விமானமான சுகோய் 30 ரகத்தை சேர்ந்த 6 போர் விமானங்கள் இணைக்கப்பட்டன. இதையொட்டி இருமருங்கிலும் நீர் பீய்ச்சி அடிக்கப்பட அதனுள் சுகோய் விமானம் ஒன்று கொண்டு வரப்பட்டது.
இதனிடையே, தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் சுகோய் போர் விமானங்கள் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், தெற்கு தீபகற்ப பகுதியில் (southern peninsula) பாதுகாப்பு ரீதியில் தஞ்சாவூர் முக்கிய இடத்தில் அமைந்திருப்பதாகவும், இங்கிருந்து கொண்டு இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா கடல் பகுதி ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
இதேபோல் இந்திய கடற்படை கப்பல்களுக்கும், இந்திய ராணுவத்தின் தரைப்படைகளுக்கும் தஞ்சாவூர் விமானப்படைத் தளத்தில் இருக்கும் போர் விமானங்கள் மூலம் போதிய உதவிகளை அளிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய விமானப்படை தலைமை தளபதி பதேரியா, சுகோய் போர் விமானங்களில் பிரமோஸ் ஏவுகணை இணைக்கப்பட்ட பிறகு, அதன் வலிமை பலமடங்கு அதிகரித்துள்ளதாகவும், கடலோர பாதுகாப்பு பணியில் இரண்டையும் ஈடுபடுத்த இருப்பது சரியான முடிவு என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கும், இந்திய பெருங்கடல் பகுதிக்கும் முக்கிய மையமாக தஞ்சாவூர் திகழ்வதாகவும், இங்கிருந்து இந்திய கடற்படைக்கு விமானப்படையால் அதிக உதவிகளை செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
Read More : பொதுத்தேர்வை எதிர்கொள்வது எப்படி - பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை
Comments