ஆந்திரா சட்டப்பேரவையில் 3 தலைநகர் அமைப்பதற்கான மசோதா தாக்கல்
ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கும் முடிவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து, அதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
பரவலாக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டுவதற்காக 3 இடங்களில் தலைநகர் அமைக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்திருந்தார். அதன்படி அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டிணம் நிர்வாக தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் அமைக்கப்படும் என கூறப்பட்டது.
ஆனால் அமராவதியை தலைநகராக நிர்மாணிக்க இடம் கொடுத்த விவசாயிகளும், பொதுமக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் 3 தலைநகர் முடிவுக்கு ஜெகன்மோகன் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து அம்மாநில சட்டப்பேரவையில் 11 மணிக்கு கூடிய சிறப்பு கூட்டத்தொடரில், 3 தலைநகர் அமைப்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
AlsoRead :சிறிய நாடான மலேசியாவால் இந்தியாவுக்கு பதிலடி தர இயலாது - மகாதீர் முகமது
175 இடங்களை கொண்ட சட்டப்பேரவையில் 151 உறுப்பினர்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வைத்திருப்பதால், அங்கு இந்த மசோதா நிறைவேறுவதில் எவ்வித சிக்கலும் இல்லை.
ஆனால் 58 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர சட்டமேலவையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 9 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். 3 தலைநகர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தெலுங்கு தேசம் கட்சிக்கு 28 உறுப்பினர்கள் உள்ள நிலையில், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவும் அக்கட்சிக்கு இருப்பதால், மேலவையில் இம்மசோதா நிறைவேறுவது சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் 3 தலைநகர் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை கண்டித்து, அமராவதியில் விவசாயிகளும், தெலுங்கு தேசம் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை வெடித்ததால் பதற்றமான சூழல் நிலவியது.
இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதேவ் கல்லா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமராவதியை தவிர்த்து வேறு நகரங்களையும் தலைநகர் ஆக்கினால் அமராவதி தலைநகர் திட்டத்திற்கு நிலம் கொடுத்த தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி விவசாயிகள் உள்ளிட்டோர் போராடி வருகின்றனர்.
Comments