பதற்றம் இல்லாமல் பொதுத்தேர்வை எதிர்கொள்வது எப்படி - பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை

0 1770

தோல்விகள்தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான படிப்பினைகளை வழங்கும் என்றும், ஆதலால் தோல்விகளில் இருந்து படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார். 

டெல்லியில் இன்று நடைபெற்ற பரீக்சா பே சார்ச்சா (Pariksha Pe Charcha) எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2 ஆயிரம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர், பதற்றம் இல்லாமல் தேர்வை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், தேர்வில் தோல்வியடைந்தால், அதை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அறிவுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தோல்விகளில் இருந்தும் படிப்பினைகளை கற்றுக் கொள்ள முடியும் என்றும், அதனால் தோல்விகளை கண்டு துவண்டு போய் விடக் கூடாது என்றும் கூறினார்.

சந்திராயன் 2 திட்டம் தோல்வியடைந்தது குறித்தும், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையே 2001ம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் முடிவு குறித்தும் மோடி சுட்டிக்காட்டினார். சந்திராயன் 2 திட்டம் வெற்றி அடைவது சந்தேகம்தான் எனத் தெரிவித்து, தம்மை சந்திராயன் 2 விண்கலத்தை செலுத்தும் நிகழ்வுக்கு செல்ல வேண்டாம் என சிலர் கேட்டுக் கொண்டதாகவும், இருப்பினும் தாம் அங்கு சென்றதாகவும், திட்டம் தோல்வியடைந்த போதிலும் விஞ்ஞானிகளை சந்தித்து ஊக்குவித்து, அவர்களின் கடின பணியை பாராட்டியதாக குறிப்பிட்டார்.

கொல்கத்தாவில் 2001ம் ஆண்டு நடைபெற்ற இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அனில் கும்ப்ளே, காயமடைந்தபோதும் தொடர்ந்து விளையாடி, அணிக்கு வெற்றி தேடி தந்ததாகவும் குறிப்பிட்டார்.

பிரச்னைகளை எவ்வாறு எடுத்து கொள்கிறோம் என்பதை இது காட்டுவதாக தெரிவித்த அவர், ராகுல் டிராவிட், லட்சுமண் ஆகியோர் இந்திய அணி பெரும் பின்னடைவில் இருந்தபோது, சிறப்பாக விளையாடி வெற்றி தேடி தந்ததையும் குறிப்பிட்டார். ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் உத்வேகம் (This is power of positive thinking and motivation) ஆகியவற்றுக்கு இருக்கும் சக்தியே இது எனவும் மோடி அறிவுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர் ஒருவர்,  இரவில் ஆந்தை போல விழித்திருக்கும் வழக்கத்தை கொண்ட தாம் காலையில் எழுந்திருப்பதில்லை எனவும், ஆதலால் அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லதா அல்லது இரவில் விழித்திருந்து படிப்பது நல்லதா என  கேள்வியெழுப்பி, தமக்கு அறிவுரை வழங்கும்படி கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, அதிகாலையில் நமது மனநிலையானது மழைக்கு பிந்தைய தெளிந்த வானம் போல இருக்கும் என்றும், ஆதலால் அதிகாலையில் படிப்பதே நல்லது என்றும் குறிப்பிட்டார்.

பணிகளின் காரணமாக அதிகாலையில் எழும் வழக்கமும், இரவில் தாமதமாக தூங்க செல்லும் வழக்கமும் தமக்கு இருப்பதாகவும் கூறிய மோடி,  ஆதலால் இரவு நேரத்தில் படிக்கும்படி அறிவுரை வழங்கும் தார்மீக உரிமை தனக்கு இல்லை என்றும் மோடி கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments