திரைப்படமாக்க முயன்ற குற்றபரம்பரையில் கமலை நடிக்க வைக்க தயங்கிய பாரதிராஜா..

0 1109

நான் ஒவ்வொருமுறையும் என் இனிய தமிழ் மக்களே என்று சொல்லும்போது அதை கேட்கும் மக்களுக்கு இவன் நம்மில் ஒருவன், நம் சகோதரன், நம் மண் சார்ந்தவன் என்ற உணர்வு வரும். அதன் பிரதிபலிப்பே அவர்களின் கை தட்டல் என டைரக்டர் பாரதிராஜா கூறியுள்ளார்.

பேட்டி ஒன்றில் பேசிய அவர் தான் இயக்கி நடித்து வரும் குற்றப்பரம்பரை web series பற்றிய சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். குற்றப்பரம்பரை web series-ல் முதலில் மேற்கு ஐரோப்பாவை சேர்ந்த ஐரிஷ் இன மக்களை பற்றியும், பின்னர் வடமாநிலத்தில் காட்டுக்குள் இருந்து கொண்டே சுதந்திரத்திற்காக போராடிய வீரர் ஒருவரை பற்றியும் சொல்கிறேன்.

மூன்றாவதாக தான் உசிலம்பட்டியை கதைக்களமாக கொண்டு வருகிறேன். கைரேகை சட்டத்தை வைத்து கொண்டு திருடர்கள் என்று ஒரு இன மக்கள் முத்திரை குத்தப்பட்டதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்கள் விடுதலை போராளிகள் என்றார் பாரதிராஜா.

பெருங்காமநல்லூரில் 16 பேர் சுட்டு கொல்லப்பட்டது ஏன் உள்ளிட்ட பல வரலாற்று செய்திகளை இரண்டரை மணி நேர சினிமாவில் சொல்ல முடியாது. ஒரு பெரிய வரலாற்றை, காவியத்தை கலைநயமாக சொல்ல நினைக்கிறேன். இதற்கு அதிகம் நேரம் பிடிக்கும் என்பதாலேயே குற்றப்பரம்பரை குறித்து திரைப்படமாக எடுக்காமல், web series வடிவத்தில் எடுக்க முடிவு செய்தேன் என்றார்.

விடுதலை போராட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை கண்முன் நிறுத்த பெரிய கிராமங்களை செட் போட்டு உருவாக்க வேண்டும். நான் மினிமம் பட்ஜெட்டில் படமெடுப்பவன். என்னால் மிக பெரிய செட்டுகளை உருவாக்கி படமெடுக்க முடியாது என்றார்.மேலும் இந்த web series-ல் பின்னத்தேவன் என்ற முதியவர் வேடத்தில் தான் நடிப்பதாக கூறினார்.

குற்றப்பரம்பரையை திரைப்படமாக்க முயற்சித்த போது கமல்ஹாசனை நடிக்க வைப்பதாக பேச்சு எழுந்தது பற்றிய கேள்விக்கு, என்ன தான் கமலை நடிக்க வைத்திருந்தாலும் அவரது நிறம் மற்றும் தோற்றம் கதைக்கும், காட்சிக்கும்கொஞ்சம் அந்நியப்பட்டிருக்கும். ஆகவே தான் அவரை நடிக்க வைப்பதில் தயக்கம் இருந்தது என்றார் பாரதிராஜா.

நான் திரைத்துறைக்கு வந்த புதிதில் வியந்து ரசித்த டைரக்டர் ஸ்ரீதர். அவர் கேமராவை நகர்த்தி கொண்டே சென்று புதிய முறையில் படமெடுத்தார். அவவருடைய முதல் படமான கல்யாண பரிசு , மிக பெரிதாக பேசப்பட்ட திரைப்படம். என்னை பெரிதும் பாதித்த மற்றும் கவர்ந்த ஒரு டைரக்டர் என்றால் அவர் ஸ்ரீதர் தான் என் கூறினார் பாரதிராஜா.

நான் சினிமாவில் நுழைந்த போது எடுக்கப்பட்ட கிராமம் சார்ந்த படங்கள் எல்லாம் செட் போட்டு எடுக்கப்பட்டன. அந்த செட்டில் இருந்து பெயிண்ட் வாசனை தான் வரும், மண் வாசனை வராது. நான் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருக்கும்போதே படம் இயக்கினால் ஸ்டுடியோவிற்குள் வைத்து இயக்க கூடாது என தீர்மானித்தேன்.

ஏன் கிராமம் சார்ந்த படங்களில் அதன் முழு அழகை காட்ட கூடாது என்று சிந்தித்தே மண் வாசனை மிக்க படங்களை, கிராமங்களுக்கே சென்று உருவாக்கினேன் என குறிப்பிட்டார் பாரதிராஜா.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments