சென்னை திரும்பிய மக்கள்.. வழியெங்கும் வாகன நெரிசல்..!
பொங்கலை சொந்த ஊர்களுக்கு விடுமுறையில் சென்ற மக்கள், விடுமுறை முடிந்து சென்னைக்கு மீண்டும் திரும்பியதால், பேருந்துகள், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதேபோல், சுங்கச்சாவடிகளிலும் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது.
பொங்கலை கொண்டாடுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள சொந்த ஊர்களுக்கும் குடும்பத்துடன் சென்னையில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இன்று மீண்டும் பணிக்கு திரும்பும் திட்டத்துடன் கார்கள், பேருந்துகள், ரயில்கள் மூலம் சென்னைக்கு திரும்பி வந்தனர். இதனால் சென்னைக்கு வரும் வழியிலுள்ள சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் அதிகம் காணப்பட்டது. திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு கார்கள், பேருந்துகள் அணிவகுத்து நின்றன.
ஆத்தூர் மற்றும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணமின்றி கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டன. வாகனங்கள் நிற்காமல் சென்றதால் சோதனைச் சாவடி உள்ள பகுதிகளில் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.காவல்துறையினரின் நடவடிக்கையால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த மக்கள் இரு சுங்கச்சாவடிகளையும் சிரமமின்றி கடந்து சென்றனர்.
வாகனங்கள் பெருமளவில் வந்ததால் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் கடும் நெரிசல் காணப்பட்டது. இருப்பினும் அலுவலக ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உரிய நேரத்தில் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உதவும் வகையில் நெரிசலை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் வெளியூர்களில் இருந்து மக்கள் அதிகம் வந்ததால், காலை முதல் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல், ரயில்கள் மூலமாகவும் ஏராளமானோர் சென்னைக்கு திரும்பினர். இதன்காரணமாக சென்னை நோக்கி வந்த ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிலம்பு விரைவு ரயில், கொல்லம் -தாம்பரம் விரைவு ரயில், பொதிகை விரைவு ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.
Comments