ஸ்பேஸ் எக்ஸ் சோதனை வெற்றி

0 1323

விண்வெளிப் பயணத்தின்போது ராக்கெட் வெடித்துச் சிதறினாலும், அதில் பயணிக்கும் வீரர்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி பத்திரமாக தரையிறங்கும் சோதனையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது.'

விண்வெளிக்கு மனிதர்கள் பயணப்படும் போது ஏற்படும் அழுத்தம் மற்றும் தொழில்நுட்பக் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ராக்கெட் வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளது. இதற்குத் தீர்வு காணும் வகையிலும், அவசர காலத்தில் வீரர்களை தரையிறக்கும் நோக்கத்தில் "க்ரூ டிராகன்" எனும் புதிய கேப்சூல் அமைப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்தது.

இதுதொடர்பான சோதனை ஏற்கனவே தோல்வியடைந்த நிலையில் மீண்டும் இந்த சோதனை நடத்தப்பட்டது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து ஃபால்கன் 9 வகை ராக்கெட்டை ஏவ திட்டமிடப்பட்டது. இதில் கேப்சூல் போன்ற அமைப்பினுள் சாதாரண மனிதர்களைப் போன்று இரு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. அனைத்து சோதனைகளும் இறுதியடைந்த பின் ஃபால்கன் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

வெண்ணிற புகையைக் உமிழ்ந்தபடி விண்ணில் சீறிப் பாய்ந்த ராக்கெட் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே சுமார் 19 கிலோ மீட்டர் உயரத்திற்குச் சென்ற போது ராக்கெட்டின் ஒரு பகுதி வெடிக்க வைக்கப்பட்டது.

அப்போது மேல் நோக்கிச் சென்ற கேப்சூல் சுமார் 32 கிலோ மீட்டர் உயரத்திற்குச் சென்றதும், அங்கிருந்து நான்கு பாராசூட்கள் விரிக்கப்பட்டு கேப்சூல் அட்லாண்டிக் கடலில் தரையிறக்கப்பட்டது. இதனைக் கண்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

கடலில் விழுந்த க்ரூ டிராகன் கேப்சூல் பின்னர் மீட்கப்பட்டது. இந்த திட்டம் துல்லியமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments