உடலுறுப்பு தான அறுவை சிகிச்சை - அரசு மருத்துவர்கள் அசத்தல்

0 1072

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை வெற்றிகரமாக அகற்றி, அவற்றை உடனடியாக சென்னை மற்றும் கோவை மருத்துவமனைகளுக்கு அனுப்பி, 3 பேருக்கு மறுவாழ்வு அளிக்கச் செய்து சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையத்தைச் சேர்ந்த 58 வயதான சிவலிங்கம், கடந்த 15ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கினார். படுகாயங்களுடன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காத நிலையில், 19ஆம் தேதி அதிகாலை ஒரு மணியளவில் சிவலிங்கம் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இனி அவரை காப்பாற்றவே முடியாது என்ற தகவலை சிவலிங்கத்தின் குடும்பத்தாரிடம் மருத்துவர்கள் தெரிவித்தபோது, அந்த துக்க தருணத்திலும் தனது தந்தையின் உடலுறுப்புகளை மனமுவந்து தானம் செய்ய முன்வந்தார் சிவலிங்கத்தின் மகன் ராமலிங்கம். உடனடியாக களத்தில் இறங்கிய மருத்துவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு இந்தத் தகவலை தெரிவித்தனர்.

தமிழ்நாடு உறுப்பு மாற்று மையத்தின் ஆலோசனைப்படி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பெரியசாமி தலைமையிலான மருத்துவர்கள் குழு மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகளை அகற்றும் பணியைத் தொடங்கியது. இரண்டரை மணி நேரத்தில் இருதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.

சென்னை மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 56 வயதான ஒரு நபருக்குப் பொருத்த விமானம் மூலம் இருதயம் அனுப்பிவைக்கப்பட்டது. இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 52 வயது நபருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்த 25 வயது இளைஞருக்குப் பொருத்தப்பட்டது.

உடலுறுப்புகள் அகற்றப்பட்டு 6 மணி நேரத்துக்குள் பொருத்தப்பட வேண்டும் என்ற விதிப்படி தானம் பெற்ற அனைவருக்கும் வெற்றிகரமாக உரிய நேரத்தில் பொருத்தப்பட்டு அவர்கள் தற்போது நலமாக உள்ளனர். கல்லீரல் மட்டுமே அது பொருத்தப்பட இருந்தவரின் உடல்நிலை ஒத்துவராததால், கைவிடப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் முதல்முறையாக நடைபெற்ற இந்த சாதனை குறித்து பேசிய மருத்துவமனையின் முதல்வர் பாலாஜிநாதன், உடலுறுப்பு தானம் செய்ய ஒருவர் முன்வருவதன் மூலம் பலரது வாழ்வில் ஒளியேற்றலாம் என்றார்.

மூளைச்சாவு அடைந்த சிவலிங்கம் எந்தவிதமான நோய் நொடியும் இல்லாமல் இருந்ததால், அறுவை சிகிச்சைகள் எளிமையாக முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தந்தையின் உடலுறுப்புகளை மனமுவந்து தானம் செய்த ராமலிங்கத்தைப் போன்று, விபத்துகளில் மூளைச்சாவு அடைபவர்களின் உடலுறுப்புகளை தானம் செய்த அவர்களின் உறவினர்கள் முன்வந்தால் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments