அண்ணா பல்கலை - அமைச்சர் கருத்து
அண்ணா பல்கலைகழகத்தை இரண்டாக பிரிக்கும் முடிவை அவசரப்பட்டு எடுக்கமாட்டோம் என்றும் அதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 அமைச்சர்கள் கொண்ட குழுவோடு 2வது கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்றும் அமைச்சர் அன்பழகன் கூறினார்.
வேலூர் மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் “தேசிய விண்வெளி சவால் 2020” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 7 மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 60 பேர் 12 குழுக்களாகப் பிரிந்து ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனில் 50 கிராம் எடை கொண்ட சிறியவகை செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தினர்.
சுமார் 20 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்படும் இந்த பலூன், 3 மணி நேரம் கழித்து வெடித்துவிடும் என்றும் அதிலிருக்கும் குட்டி செயற்கைகோள் பாராஷூட் மூலம் தரையிறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதிலுள்ள சிப்பை ஆய்வு செய்தால் காற்றுமாசு, தட்பவெட்ப நிலை உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ளலாம் என அதனை வடிவமைத்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் துணைதலைவர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பழகன், அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு பல்கலைக்கழகமாக அறிவித்து, மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு ஆயிரம் கோடியை அறிவித்துள்ளது என்றும் ஆனால் அதற்கு 2 ஆயிரத்து 570 கோடி தேவைப்படுகிறது என்றும் கூறினார்.
Comments