விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை எய்திட முதலமைச்சர் வேண்டுகோள்
சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புக்களை தவிர்த்திடவும், விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை எய்திடவும், அனைவரும் சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
31வது சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரவிழா கடைப்பிடிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நடப்பாண்டில் சாலை பாதுகாப்பு வாரவிழா ஜனவரி 20ம் தேதி தொடங்கி, ஜனவரி 26 நீங்கலாக, வரும் 27ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதில், சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாகவும், பொதுமக்கள் தங்கள் பயணத்தை விபத்தில்லா பயணமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு, மேற்கொண்ட பல்வேறு சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் 43.10% என்ற அளவில் குறைந்துள்ளன.
தவிர ஒவ்வொரு 10,000 வாகனங்களுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000-ம் ஆண்டில் 19 நபர்கள் என்ற அளவில் இருந்தது. அது 2019-ம் ஆண்டில் 3 நபர்களாக குறைந்துள்ளது.
108 ஆம்புலன்ஸ்கள், விபத்துக்கள் ஏற்படும் இடங்களுக்கு விரைவாக சென்று சேவை புரிவதால் உயிரிழப்புகள் பெருமளவில் தடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
Comments