8 சாமி சிலைகள் திருட்டு.. சுவர் ஏறி குதித்து கைவரிசை..!
தஞ்சை அருகே உள்ள 500 ஆண்டுகள் பழமையான ஆதீஸ்வரர் கோவிலில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 8 வெண்கலம் மற்றும் ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது. சுவர் ஏறி குதித்து துணிகர செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்
தஞ்சையை அடுத்த கரந்தை பூக்குளம் பகுதியில் 500 ஆண்டுகள் பழமையான ஆதீஸ்வரர் கோவில் உள்ளது. இன்று காலை குருக்கள் வழக்கம் போல் பூஜை செய்ய வந்தபோது, கோவிலின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு சிலைகள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
தகவல் அறிந்ததும், மாவட்ட எஸ்பி மகேஷ்குமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்ட போது, இரவில் மர்ம நபர்கள் பின்பக்க சுவர் ஏறி குதித்து, இரும்பு கேட்டை உடைத்து 3 அடி உயர ஆதீஸ்வரர் ஐம்பொன் சிலை மற்றும் 24 வது தீர்த்தங்கரர் சிலை, ஒன்றரை அடி உயர சரஸ்வதி சிலை, முக்கால் அடி உயர மகாதேவர் சிலை மற்றும் நவக்கிரக வெண்கல சிலைகள் உட்பட 8 சிலைகளை திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மோப்பநாய் உதவியுடன் ஆய்வு செய்த போது, மிளகாய் பொடி தூவி சென்றதால் சிறிது தூரம் சென்று நின்று விட்டது. அப்பகுதியில் சிசிடிவி கேமரா உள்ளதா என விசாரணை நடத்திவரும் போலீசார், மர்ம நபர்கள் பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Comments