வந்தே மாதரம் என முழங்காதவர்கள், இந்தியாவில் வசிக்க உரிமையற்றவர்கள்-மத்திய அமைச்சர்
வந்தே மாதரம் என முழங்க இயலாதவர்கள், இந்தியாவில் வசிப்பதற்கு உரிமையற்றவர்கள் என சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மத்திய இணை அமைச்சர் பிரதாப் சாரங்கி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டம் 70 ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என கூறினார். மேலும் 1947ல் அரசியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு ஆகிய காரணிகளின் அடிப்படையில் அல்லாமல், மதத்தின் அடிப்படையில் தேசப் பிரிவினை நிகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், பிரிவினை ஒன்றும் தவிர்க்க முடியாதது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
பிரிவினை என்ற பெயரில் காங்கிரஸ் செய்த பாவங்களுக்கு, திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தால் தாங்கள் பரிகாரம் செய்வதாகவும், இதற்காக பிரதமர் மோடியை அனைவரும் பாராட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் வசித்து வந்த இந்துக்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது, மேலும் இந்த நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தப்படுகிறார்கள் என குற்றம்சாட்டினார்.
இலவச மின்சாரம் வழகுவதாலோ அல்லது இலவச குடிநீர் வழங்குவதாலோ ஒரு நாட்டை முன்னேற்றிவிட முடியாது என்றார்.
Comments