எத்தனை நாள் ஆசையோ.! தூக்கி செல்லும் போட்டியில் மனைவிகளை மண்ணில் புரட்டி எடுத்த கணவர்கள்

0 2632

வெளிநாடுகளில் நடப்பது போன்று மனைவியை தூக்கிக் கொண்டு கணவன் ஓடும் போட்டி ஒன்று தென்காசி மாவட்டம் வீரசிகாமணி கிராமத்தில் நடைபெற்றது. சில அடி தூரம் கூட மனைவியை தூக்கிச்செல்ல இயலாமல் நடுவழியில் புரண்டு விழுந்த ஜோடிகளின் பரிதாபம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

மனைவியை கணவனும், கணவனை மனைவியும் தூக்கிக் கொண்டு ஓடுவது ஆரம்பத்தில் பொழுதுபோக்கான விளையாட்டாக பின்லாந்து நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இந்தப் போட்டி பிரபலமானது.

தற்போது இந்த போட்டி சாம்பியன் சிப் போட்டியாக நீரிலும், நிலத்திலும், சகதியிலும் ஜோடிகள் இறங்கி ச் செல்லும் விதமாக தக்க பாதுகாப்பு விதிமுறைகள் உடன் நடத்தப்படுகின்றது

அப்படி இருந்தும் மனைவியை சகதியில் மூழ்கடித்து தூக்கிச் சென்று சில கணவன்மார்கள் தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதையும் காணமுடிகிறது

இந்த நிலையில் தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் வீரசிகாமணி என்ற கிராமத்தில் நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் கரும்பு போன்ற சுவையான குறும்புடன் மனைவியை கணவன் தூக்கிச்செல்லும் இந்த போட்டி நடத்தப்பட்டது.

தார்சாலையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் தங்கள் இல்லத்தரசிகளை குழந்தைகளை போல கையில் தூக்கிக் கொண்டும், முதுகில் உப்பு மூட்டையாக சுமந்து கொண்டும் கணவன்மார்கள் தயாராக இருந்தனர்.

போட்டி ஆரம்பிக்கப் பட்டதும் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு மனைவியரை தூக்கிக் கொண்டு ஓடினர். மனைவியை குழந்தை போல கையில் தூக்கிச்சென்ற கணவன்மார் 3 பேரும் தங்கள் மனைவியரை நடுரோட்டில் மண் பானையை போட்டு உடைப்பது போல பொத்தென்று போட்டு அவர்களும் விழுந்தனர்.

மனைவியரை உப்பு மூட்டை போல சுமந்து சென்ற இருவர் மட்டும் வெற்றிகரமாக எல்லைக் கோட்டை தொட்டனர்

தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி குறுகலான சாலையில் நடத்தப்பட்ட இந்த குறும்புத்தனமான போட்டியை பயன்படுத்தி 3 கணவன்மார்கள் தங்கள் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டதாக கூடியிருந்தவர்கள் கமெண்ட் அடித்தாலும், விழுந்தவர்களுக்கு தான் வலி தெரியும் என்கின்றனர் போட்டி ஏற்பாட்டாளர்கள்...!

எப்படியும் நம்ம ஊர் வெளிநாட்டுக்கு இணையாக மாற்றாம அடங்கமாட்டாங்க போல என்பதே இந்த போட்டிகளை குதூகலமாக கண்டு ரசித்தவர்களின் கருத்தாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments