குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கூற முடியாது - கபில்சிபல்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று எந்தவொரு மாநிலமும் நிராகரிக்க முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில்சிபல் கூறியுள்ளார்.
கேரள இலக்கிய விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தைப் பின்பற்ற முடியாது என மாநில அரசு கூறுவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி கடினமான ஒன்று என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றவோ, திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தவோ செய்யலாம் என்றாலும், இதனை அமல்படுத்த முடியாது என்று கூறுவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி சிக்கலையும், கூடுதல் சிரமங்களையுமே ஏற்படுத்தும் என்றார்.
குடியுரிமை சட்ட விவகாரம் நாட்டு மக்களுக்கும், ஆட்சியாளருக்கும் இடையே நடக்கும் போராட்டமாக உள்ளது. இப்போராட்டத்தை அரசியல் சார்பின்றி மாணவர்கள், ஏழைகள், நடுத்தர குடும்பத்தினர் முன்னெடுத்து செல்வதற்கு கடவுளுக்கு நன்றி. குடிமக்கள் ஒவ்வொருவரும் வளர்ச்சியையே விரும்புகின்றனர் என அவர் கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையிலும், இந்த சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் மட்டுமின்றி, தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றையும் எதிர்த்து வருகின்றன.
Comments