காணும் பொங்கல்.. தமிழகத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்
காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோன்று சுற்றுலா தலங்களிலும் அதிக அளவில் பொதுமக்கள் கூடி காணும் பொங்கலை கொண்டாடினர்.
திருவாரூரில் காணும் பொங்கல் ஒட்டி ஆரூரான் விளையாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற போட்டிகள், நீச்சல் விளையாட்டுடன் போட்டிகள் தொடங்கின. அதைதொடர்ந்து, ஓட்டபந்தையம், மினி மாரத்தான், ரேக்ளா பந்தயம் போன்ற போட்டிகளும் நடைப்பெற்றன. வீரர்களை உற்சாகப்படுத்தியதோடு ஏராளமான பொதுமக்கள் இப்போட்டிகளை பார்த்து ரசித்தனர்.
காரைக்குடி அருகே மானகிரியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், மாட்டு வண்டிகள் ஒன்றை ஒன்று முந்தி சென்று, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் சில்வர் பீச்சில் ஏராளமன பொதுமக்கள் குடும்பத்துடன் கூடி பொழுதுபோக்கினர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும், ஒட்டகம், குதிரை போன்றவற்றின் மீது சவாரி செய்தும் கடலில் குளித்தும் மகிழ்ந்தனர்.
திருத்தணி அடுத்த லட்சுமாபுரம் கொசஸ்தலை ஆற்றில் பெருமாள்,சிவன், விநாயகர், முருகப்பெருமான் ஆகிய கடவுகள் சந்தித்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஒரே நேரத்தில் 4 கடவுள்களையும் பார்த்து வழிபட, திருத்தணி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொசஸ்தலை ஆற்றில் குவிந்தனர்.
வடசென்னையின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான, காசிமேடு மீன்பிடி துறைமுக கடற்கரையில் ஆயிரகணக்கான பொதுமக்கள் குவிந்தனர். வீட்டில் இருந்து எடுத்து வந்த கரும்பு, தின்பண்டங்களை பரிமாறி குதுகலத்துடன் ஆரவாரமாக தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.
இதே போன்று நெல்லை மாவட்ட பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கொட்டும் அருவியில் ஆனந்த குளியலிட்டு, காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலய வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் திரண்டு காணும் பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடினர். தங்கள் வீட்டிலேயே தயாரித்து கொண்டு வந்திருந்த உணவுப் பொருட்களை குடும்பத்துடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.
வேலூர் மாட்ட காவல்துறை சார்பில் குடியாத்தத்தில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பானையில் பொங்கலிட்டு காவலர்கள் பொங்கல் விழா கொண்டாடினர். விழாவில் உறியடித்தல், கயிற இழுத்தல், இசை நாற்காலி போன்ற விளையாட்டுக்களும் நடத்தப்பட்டன.
இதே போன்று திருப்போரூர், சிதம்பரம், திட்டக்குடி, மதுராந்தகம், வந்தவாசி போன்ற பல இடங்களிலும் காணும் பொங்கல் கொண்டாட்டம் களை கட்டியது.
Comments