சென்னை நகருக்குள்.. விதியை மீறி சுங்கசாவடி..! பாஸ்டேக் கேட்டு அடாவடி

0 1239

சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள சாலையில், விதியை மீறி அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி ஒன்றில், உள்ளூர் வாகன ஓட்டிகளை பாஸ்டேக் ஒட்டச்சொல்லி கட்டாயப்படுத்துவதோடு, இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மாத்தூரில் எண்ணூர் துறைமுக சாலையில் சுங்கச்சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் செயல்பட்டு வரும் இந்த சுங்கசாவடியானது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கு சுங்கம் வசூலிக்கும் ஒப்பந்தத்தை ரித்தி சித்தி அசோசியேசன் என்ற தனியார் நிறுவனம் செய்துள்ளது.

28 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையில் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு 35 ரூபாய் என்றும், உள்ளூர் வாகனங்களுக்கு 15 ரூபாய் என்றும், கனரக வாகனங்களுக்கு 180 ரூபாய் கட்டணம் என்றும் தமிழக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாஸ்டேக் கட்டாயம் என்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உத்தரவு நடைமுறைக்கு வந்ததாகக் கூறி, கடந்த 16 ந்தேதி முதல் உள்ளூர் வாகனங்களை பாஸ்டேக் ஒட்ட கட்டாயப்படுத்துவதோடு, அப்படி பாஸ்டேக் ஒட்டாத உள்ளூர் வாகனங்களுக்கு விதியை மீறி இரு மடங்குக்கும் அதிகமாக 35 ரூபாய் கட்டணமாக வசூலித்து அடாவடியில் ஈடுபடுகின்றனர்.

அப்படி அபராதக் கட்டணம் செலுத்த மறுக்கும் வாகன ஓட்டிகளை சுங்கச்சாவடியில் நள்ளிரவில் சீருடை அணியாமல் மங்கி குல்லா அணிந்து பணியில் உள்ள குண்டர்களை வைத்து மிரட்டி, ஆபாசமாக பேசித் தாக்குவதை வாடிக்கையாக செய்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளை சுங்கசாவடி குண்டர்கள் தாக்குவதும் இருதரப்பும் சண்டையிட்டு கொள்வதும் தொடர்கதையாகி வருகின்றது.

நெடுஞ்சாலையின் இருபுறமும் விபத்தை ஏற்படுத்தும் வகையில், கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், சாலை குண்டும் குழியுமாக சீர்குலைந்து கிடப்பதாகவும் தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்தாலும், இந்த சாலையை சீரமைக்க மாத்தூர் சுங்கச்சாவடி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சுங்கசாவடியில் இருந்து 20 கிலோ மீட்டருக்கு உட்பட்டோ, மாநகராட்சி எல்லைக்குள்ளோ சுங்கச்சாவடிகள் அமைக்கப்படக்கூடாது என்ற விதி உள்ள நிலையில், விதியை மீறி சென்னை மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட சாலைக்குள் இந்த சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது...!

வாகன ஓட்டிகளிடம் பெறப்படும் சாலைவரியைக் கொண்டு மாநில நெடுஞ்சாலை துறையால் 371 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் போடப்பட்ட இந்த 28 கிலோ மீட்டர் நீள சாலைக்கு, வாகன ஓட்டிகளிடம் இருந்து மீண்டும் 600 கோடி ரூபாய் வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 16 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 40 ஆண்டுகள் இந்த சுங்கச்சாவடியில் வசூல் நடக்கும் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகி உள்ளது.

வழக்கமாக கிலோ மீட்டருக்கு இத்தனை பைசா என்று குறிப்பிட்டு சுங்கக் கட்டணம் நிர்ணயிப்பது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வழக்கம், அதிகட்சமாக தமிழகத்தில் புதிதாக போடப்பட்ட சாலைகளுக்கே, ஒரு கிலோ மீட்டருக்கு 65 பைசா முதல் 40 பைசா மட்டுமே வசூலிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாத்தூர் சுங்கச்சாவடியில் உடைந்து சீர்குலைந்து போன பராமரிக்காத இந்த சாலைக்கு கிலோமீட்டர் கணக்கீடு ஏதும் இன்றி நேரடியாக மொத்தமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர் வாகன ஓட்டிகள்.

விதிமீறலையும், தவறுகளையும் ஒப்புக் கொண்ட சுங்கச்சாவடி மேலாளர் நசீம், இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக தெரிவித்தார்

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பெரும்பாலான விதிகளை அப்பட்டமாக மீறி நகருக்குள் வசூல் கொள்ளையில் ஈடுபடும் இந்த சுங்கச்சாவடிக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்பதே உள்ளூர் வாகன ஓட்டிகளின் ஒட்டு மொத்த வேண்டுகோளாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments