களைகட்டிய சுற்றுலாத் தலங்கள்
காணும் பொங்கலையொட்டி, சுற்றுலா தலங்களில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் வெள்ளம் அலைமோதியது. கரையை கடந்து கடலுக்கு மக்கள் செல்லாமல் இருக்க தடுப்பு கட்டைகள் கட்டப்படிருந்தன. கரையிலேயே ஏராளமானவர்கள் அமர்ந்து கதை பேசியும், கையோடு கொண்டு வந்த உணவுகளை உண்டும் களித்தனர்.
மக்கள் கூட்டம் அலைமோதியதால் மெரினா கடற்கரையில் மட்டும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். மெரினாவில் காந்தி சிலை அருகே தற்காலிகமாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருந்தது. நேப்பியார் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.
அவசர உதவிக்காக 7 ஆம்புலன்சில் மருத்துவக் குழுக்கள் பணியில் இருந்தனர். மீட்பு பணிக்காக தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.நூற்றுக்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் மோட்டார் படகுடன் மெரினாவில் மீட்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். 13 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
3 பறக்கும் கேமிராக்கள் மூலம் போலீசார் கூட்டத்தை கண்காணித்தனர். 12 இடங்களில் நவீன கேமராக்களும் பொருத்தப்பட்டு இருந்தன. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்த படியே போலீசார் பார்த்தனர்.
குழந்தைகளின் கைகளில் சிறிய வளையம் போன்ற அடையாள அட்டை கட்டப்பட்டது. அதில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றை எழுதிய பின்னரே மெரினா மற்றும் எலியஸ் கடற்கரைக்குள் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர்.
இதே போல எலியஸ் கடற்கரையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தீவுத்திடல் பொருட்காட்சி, கிண்டி சிறுவர் பூங்காவிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவில் கூட்டம் அலை மோதியது.காலையில் இருந்து அங்கு மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். கட்டுக்கு அடங்காத கூட்டத்தில் அந்த பிரமாண்ட பூங்காவை நிரம்பி வழிந்தது.
மாமல்லபுரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். வெண்ணை உருண்டை பாறை, அர்ஜுனன் தபசு, கடற்கரைக் கோவில், ஐந்து ரதம், லைட் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்தும், ஆங்காங்கே குடும்பத்துடன் அமர்ந்து விளையாடியும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர்.
காணும் பொங்கல் விழாவையொட்டி பழவேற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் காலை முதலே குவிந்தனர். அவர்கள் கடற்கரையில் குளித்தும், மர நிழல்களில் அமர்ந்தும் உற்சாகமாக பொழுதை கழித்தனர். வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வந்திருந்த உணவை உண்டு மகிழ்ந்தனர்.
திருச்சியில் உள்ள பூங்காக்கள் மற்றும், ஸ்ரீரங்கம் மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா, முக்கொம்பு ஆகிய சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்தும், பூங்காக்களில் குழந்தைகளுடன் விளையாடியும் மக்கள் மகிழ்ந்தனர்.
பின்னர் கோவிலிக்கு சென்று சுப்பிரமணியரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
காணும் பொங்கலை முன்னிட்டு ஊட்டி படகு இல்லத்தில் குடும்பத்துடன் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். குன்னூர் சிம்ஸ் பூங்காவிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை காண சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.இதனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயக்கப்பட்டது. நாளை வரை இந்த முறை அமலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள், கடற்கரைகள், பூங்காக்கள், நீர் நிலைகள், கோவில்கள், வழிபாட்டு தலங்கள் என அனைத்து இடங்களிலும் கூடிய மக்கள் காணும் பொங்கலை கொண்டாட மகிழ்ந்தனர்.
Comments