அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஜெர்ஸி காளைக்கு முதல் பரிசு..! விழாக்குழுவின் தேர்வுக்கு எதிர்ப்பு

0 3287

லங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு அறிவிக்கப்பட்ட காளை, நாட்டு மாடு அல்ல என்றும் விதியை மீறி களமிறக்கப்பட்ட ஜெர்சி காளைக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று உலகபுகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் 739 காளைகள் பங்கேற்றன. பல காளைகள் மிகச்சிறப்பாக விளையாடி மாடுபிடி வீரர்களை சிதறடித்தன.

இதில் நன்றாக நின்று சுற்றி விளையாடும் சிறந்த காளை தேர்ந்தெடுக்கப்பட்டு கார் பரிசளிக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், நின்று விளையாடிய காளைகள் பட்டியலில் இருந்து சிறந்த காளைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டி முடிந்த பின் ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் அறிவித்தார்.

மதிமுக மதுரை புறநகர் மாவட்டச்செயலாளர் மார்நாட் என்பவரின் காளை கருப்புக்கு முதல்பரிசு அறிவிக்கப்பட்டது. இரண்டாவது பரிசை புதுக்கோட்டை காளை ராவணன் வென்றது. இந்நிலையில் முதல் பரிசை வென்ற காளை கருப்பு நாட்டு காளை இல்லை எனவும் ஜெர்சி காளை என்றும் ஜெர்சி காளைக்கு விதியை மீறி முதல் பரிசு கொடுத்தது ஏன் எனவும் வீர விளையாட்டு மீட்புப் கழகம் ராஜேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜேஷ் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் மட்டுமல்ல, விலங்குகள் நல வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு உறுப்பினராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் பங்கேற்பதற்கு முன் இறுதிகட்ட மருத்துவபரிசோதனைமில் ஜெர்சி காளையை கால்நடை மருத்துவர்கள் அனுமதித்தது ஏன் ? எனவும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாடு உரிமையாளர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இந்த குற்றச்சாட்டை ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்துவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நாட்டு மாட்டினத்தை காக்க போராடி கொண்டு வரப்பட்ட ஜல்லிக்கட்டில் சத்தமில்லாமல் இறக்குமதி காளையான ஜெர்ஸியை புகுத்தி இருப்பதன் பின்னணியிலும் சர்வதேச அரசியல் ஒழிந்து இருப்பதாக ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த சர்சைக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments