இந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி
மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதியை இந்திய அரசு குறைத்திருப்பதால், மலேசிய அரசுக்கு கடும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.
உலக அளவில் பாமாயில் உற்பத்தியில் இந்தோனேசியா முதலிடத்திலும், மலேசியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யும் நாடுகளில் 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது.
பாமாயிலை கடந்த ஆண்டு மட்டும் 44 லட்சம் டன்கள் அளவுக்கு மலேசியாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அதாவது மலேசியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பாமாயிலில், ஏறத்தாழ 24 சதவீதம் இந்தியாவின் பங்களிப்பாக உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் தான் சீனா, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு எதிராக மலேசிய பிரதமர் மகாதிர் முகமது கருத்து தெரிவித்திருந்தார். அப்போது இரு நாடுகள் உறவில் விரிசல் ஏற்பட தொடங்கியது.
மேலும் குடியுரிமை திருத்தம் சட்டம் கொண்டு வரப்பட்டதற்கு எதிராகவும் மகாதிர் முகமது கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த இந்திய அரசு, மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதியை குறைக்க முடிவு செய்தது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படாவிட்டாலும், வணிகர்களுக்கு வாய்மொழியாக மத்திய அரசு அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. இதனிடையே இந்திய வர்த்தகர்கள் மலேசியாவிற்கு பதில் இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய ஆரம்பித்து விட்டனர்.
இதனால் மலேசியாவில் பாமாயில் ஏற்றுமதி அதிரடியாக குறைந்து விலையும் கணிசமாக சரிந்துள்ளது. இந்தோனேசிய பாமாயில் ஒரு டன் 792 டாலருக்கு விற்கப்படும் நிலையில், மலேசிய பாமாயில் விலை 748 டாலராக குறைந்துள்ளது.
இந்தியாவின் அதிரடியான நடவடிக்கைக்குப் பிறகும் மலேசிய பிரதமர் தனது நிலைப்பாட்டை மாற்ற முடியாது என்று தெரிவித்து இருந்தார். எனினும், இப்பிரச்சனை தொடர்பாக இந்திய அரசு அதிகாரிகள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளுடன் மலேசியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தியாவிற்குப் பதில் பாமாயில் ஏற்றுமதிக்காக மற்ற நாடுகளை அணுகுவது ஒன்றும் மலேசியாவுக்கு எளிதானது அல்ல. இது ஒருபுறம் இருக்க, பாமாயில் தவிர்த்து மேலும் பல மலேசிய இறக்குமதி பொருட்களுக்கும் தடை விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மலேசியாவின் வருவாய் மேலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது. மலேசியாவில் இருந்து அதிக அளவிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில் இந்தியா 7வது இடத்தில் உள்ளதால் வர்த்தக உறவு பாதிப்பு மலேசியாவுக்கு பெரிய அளவில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்.
ஆனால் இந்தியாவில் இருந்து அதிகம் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில் மலேசியா 17வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments