2ஆவது ஒருநாள் கிரிக்கெட் - ஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 341 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலுள்ள மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இப்போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
கடந்த போட்டியில் 10 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்த ரோஹித் சர்மா, இப்போட்டியில் பொறுப்பை உணர்ந்து விளையாடினார். மறுமுனையில் தவானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
44 பந்துகளில் 42 ரன்களை குவித்திருந்தபோது, ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். இதையடுத்து தவானுடன் கோலி கைகோர்த்தார். இந்நிலையில் அரைசதம் விளாசிய தவான், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 96 ரன்களில் அதிர்ச்சியளிக்கும் வகையில் அவுட்டானார்.
பின்னர் வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 7 ரன்னில் வெளியேறவே, கோலியுடன் கே.எல். ராகுல் ஜோடி சேர்ந்தார். இருவரின் அதிரடியால் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
இதனிடையே அரைசதம் அடித்த நிலையில் 78 ரன்களில் கோலி அவுட்டானார். இருப்பினும் கே.எல். ராகுல் அதிரடியாக 80 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் ரவீந்திர ஜடேஜாவும் 20 ரன்களை சேர்க்கவே, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 340 ரன்களை குவித்தது.
Comments