நிர்பயா கொலை வழக்கில் அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகள் - நிர்பயா தாயார் கண்ணீருடன் குற்றச்சாட்டு
நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிடம விவகாரத்தை ஆம் ஆத்மி கட்சியும், பாஜக வும் அரசியல் பந்தாட்டமாக மாற்றி விட்டன என அவரது தாயார் ஆஷா தேவி கண்ணீருடன் குற்றம் சாட்டி இருக்கிறார்.
நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளை தூக்கில் ஏற்றும் விவகாரத்தில் டெல்லி ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி அலட்சியம் காட்டி விட்டது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் நேற்று குற்றஞ்சாட்டினார். அதற்குப் பதிலளித்த டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, சட்டம் ஒழுங்கு, திகார் நிர்வாகம், போலீஸ் உள்ளிட்ட அதிகாரங்களை கையில் வைத்துள்ள மத்திய அரசு தான்தண்டனை நிறைவேற்றாமல் வேடிக்கை பார்க்கிறது என்று கூறினார்.
இந்த அதிகாரங்களை 2 நாட்களுக்கு டெல்லி அரசுக்கு அளித்தால், தண்டனையை நிறைவேற்றி விடுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே டெல்லியில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஆஷா தேவி, தமது மகளின் கொலை வழக்கில் இரண்டு கட்சிகளும் அரசியல் ஆதாயம் தேடுவதாக கண்ணீர் மல்க வேதனையை வெளியிட்டார். பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பேன் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, இதில் தலையிட்டு, தமக்கு நீதி வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
2012 ல், நிர்பயா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த வேளையில், தேசிய கொடிகளுடன் வீதிக்கு வந்து போராடிய அதே அரசியல் கட்சிகள் இப்போது தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் விவகாரத்தை வைத்து அரசியல் செய்கின்றன என்பது அவரது குற்றச்சாட்டு. இதனிடையே குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ள நிலையில், இதர குற்றவாளிகளும் இதே பாணியில் கருணை மனுக்களை அளித்தால், அவற்றின் முடிவு வெளிவரும் வரை அவர்களை தூக்கில் ஏற்றுவது தள்ளிப் போகும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments