காணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்

0 3354

பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கலை வீடுகளில் கொண்டாடிய மக்கள், உற்றார் உறவினர்களைக்கண்டு, கூடிமகிழும் காணும் பொங்கல் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பூங்காக்களிலும், சுற்றுலா மையங்களிலும் அலைகடலென திரண்ட மக்கள், குழந்தைகளுடன் பொழுதைக்களித்து குதூகலமடைந்தனர்.

திருச்செந்தூர் 

திருச்செந்தூர் கடற்கரையில் காணும் பொங்கலை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கில் குவிந்த மக்கள், குடும்பத்தினருடன் கடலில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் கோவிலிக்கு சென்று சுப்பிரமணியரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஏராளமான மக்கள் குவிந்ததால் தனியார் விடுதிகள், மற்றும் கோயில் விடுதிகளில் கூட்டம் அலைமோதியது.

தென்காசி 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயினருவியில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. ஆண்கள் பகுதியில் மட்டும் நன்றாக குளித்து மகிழ்ந்தனர். பெண்கள் பகுதியில் குறைந்த அளவில் நீர்வரத்து உள்ளது. ஐந்தருவியில் 4 கிளைகளிலும் தண்ணீர் வருவதால் அங்கு கூட்டம் அதிகமாக உள்ளது. 

செங்கல்பட்டு

காணும் பொங்கலையொட்டி, புகழ்பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். வெண்ணை உருண்டை பாறை, அர்ஜுனன் தபசு, கடற்கரைக் கோவில், ஐந்து ரதம், லைட் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்தும், ஆங்காங்கே குடும்பத்துடன் அமர்ந்து விளையாடியும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர்.

இதையொட்டி சென்னையிலிருந்து 450க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும், புதுச்சேரியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி 

காணும் பொங்கலையொட்டி, திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்கள் மற்றும், ஸ்ரீரங்கம் மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா, முக்கொம்பு ஆகிய சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. முக்கொம்பில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்தும், பூங்காக்களில் குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்ந்தனர். இதையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஈரோடு 

ஈரோடு மாவட்டம் ராசாம்பாளையத்தில் பாரம்பரிய கலைகளான சிலம்பம், பரதநாட்டியம் உள்ளிட்டவற்றுடன் பொங்கல் விழா நடைபெற்றது. பொங்கல் விழாவில் பாரம்பரிய சேலைக் கட்டில் வந்த சின்னஞ்சிறுமியின் சிலம்பத் திறன் காண்போரை வியக்கச் செய்தது. இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளிட்டோர் தங்கள் சிலம்பத் திறனைக் காட்டினர்

பறையிசை முழங்க நடைபெற்ற சிலம்பக் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. பொங்கல் விழாவை முன்னிட்டு பரத நாட்டியம், உறியடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள சுற்றுலா தலமான, அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் சுனையில் ஏராளமானோர் குவிந்து காணும் பொங்கல் கொண்டாடினர். வற்றாத நீர் வளம் மற்றும் பசுமை நிறைந்த வனப்பகுதியில் ஓடும் சுனையில் குதூகலத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் அங்கேயே உணவு சமைத்து, குடும்பத்துடன் அமர்ந்து உணவு உண்டு, ஆடிப்பாடி விளையாடி கொண்டாடினர்.

மாமல்லபுரம் 

மாமல்லபுரம் கடற்கரையில் ஆயிரக்கணக்கில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் கடற்கரை மணலில் குழந்தைகளுடன் விளையாடியும், கடலில் உற்சாகத்துடன் குளித்தும் மகிழ்ந்தனர்.

அங்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டம் அதிகரித்ததால் அதனைத்தாண்டி வந்து கடலில் குளித்தனர். அவர்களை ஒலிபெருக்கி மூலம் எச்சரித்த போலீசார் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுரை வழங்கினர். மேலும் அங்கு எராளமான போலீசாரும், கடலோர பாதுகாப்பு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி

காணும் பொங்கலையொட்டி தேனி மாவட்ட எல்லையை யொட்டியுள்ள கேரளாவின் பிரபலமான சுற்றுலா தலமான மூணாறு, தேக்கடி, மாட்டுப்பட்டி, குண்டளை ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு அவர்கள் பூங்காக்களில் குடும்பத்துடன்  விளையாடியும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். பனிப்பொழிவுடன் கூடிய இதமான சூழலில் வனப்பகுதியை சுற்றிப்பார்த்து உற்சாகம் அடைந்தனர். 

கொடைக்கானல்

கொடைக்கானலில் காணும் பொங்கல் மற்றும் தொடர் விடுமுறையை யொட்டி ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பிரையன்ட் பூங்கா, ஏரிச்சாலை, குணா குகை, பில்லர் ராக், மொயர் பாயின்ட், அப்பர் லேக் ரோடு பகுதியில் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.ஒரே நாளில் ஏராளமானோர் குவிந்ததால் வாகன நெரிசல் ஏற்பட்டது.

குமரிமாவட்டம்

குமரிமாவட்டம் திற்பரப்பு அருவியில் குவிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், குடும்பத்துடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். பூங்காக்களில் விளையாடி, உல்லாச படகு சவாரி செய்து குதூகலத்துடன் கொண்டாடினர். அதிக அளவில் குவிந்த மக்கள், சாலையின் இரு புறமும் வாகனங்களை நிறுத்திச் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை

சென்னை மெரினா கடற்கரையில் காணும் பொங்கலையொட்டி, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளதால் அப்பகுதியே மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது.  மெரினா கடற்கரையில் இன்று காலை முதலே மக்கள் குடும்பத்துடன் திரண்டனர். 

இதனால் எங்கு பார்த்தாலும் கூட்டமாக காட்சியளித்தது.  இதையொட்டி 2500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அசம்பாவிதத்தை தவிர்க்க  கடற்கரையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 

கூட்டத்தினரை உயர் கோபுரங்களை அமைத்தும், ஆளில்லா விமானம் மற்றும் சிசிடிவி கேமராக்களை கொண்டு  போலீஸார் கண்காணித்தனர்.  இதேபோல் கடலோர காவல்படையினரும் ஹெலிகாப்டர், மின்விசை படகுகள் மூலம் கடற்கரையோர பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.  

நெல்லை 

நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான மணிமுத்தாறு, பாபநாசம், சொரிமுத்து அய்யனார் கோயில், காரையார், உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்தனர். அவர்கள் குடும்பத்துடன் அருவிகளில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

இதையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேனி 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரையில் நூற்றுக்கணக்கில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். வெளியூர்களில் இருந்தும், குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் வந்து காணும் பொங்கல் கொண்டாடினார்கள்.

சேலம் 

சேலம் அருகே ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில், ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள், உற்சாகத்துடன் காணும் பொங்கலை கொண்டாடினார்கள்.

குடும்பத்துடன் அமர்ந்து உணவு சாப்பிட்டும், பொம்மைகளுடன் சேர்ந்து குழந்தைகளை புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

எப்போதும் வெறிச்சோடி காணப்படும் இந்த பூங்கா, இன்று மக்கள் திரண்டதால், பிற்பகல் வரை நுழவுக்கட்டணமாக ரூபாய் 50 ஆயிரம் வசூலானதாக ஊழியர்கள் தெரிவித்தனர். 

சென்னை

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவிலும் காணும் பொங்கலையொட்டி  மக்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. பூங்காவில் திரண்ட மக்கள், அங்குள்ள  இயற்கை சூழல், காட்சிப்படுத்தப்பட்டுள்ள விலங்குகள், புதுமையான augment reality show போன்றவற்றை குடும்பத்துடன் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு, விரைவாக நுழைவு சீட்டு வழங்க கூடுதலாக ஒரு தற்காலிக நுழைவு கட்டணம் வசூலிக்கும் மையம் அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் பூங்கா உள்ளே நுழைவதற்கு தனி வழியும், வெளியே செல்ல தனி வழியும் அமைக்கப்பட்டிருந்தது. இதேபோல்  பாதுகாப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments