நிர்பயா வழக்கு: தூக்கை நிறைவேற்றும் சிறை எண் 3க்கு மாற்றம்
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் திட்டமிட்டபடி வரும் 22 ஆம் தேதி தூக்கில் ஏற்றப்படுவார்களா என்பது குறித்து நிச்சயமற்ற சூழல் உருவாகி இருந்தாலும், தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் சிறை எண் 3 க்கு அவர்கள் மற்றப்பட்டுள்ளதாக திகார் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளுக்குமான அனைத்து சட்ட ரீதியான நிவாரணங்களும் முடிவடைந்துள்ள நிலையில் அவர்களை வரும் 22 ஆம் தேதி தூக்கில் இடுவதற்கான கறுப்பு வாரண்டை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் தாக்கல் செய்த கருணை மனுவை டெல்லி அரசின் பரிந்துரையின்படி நிராகரித்து விட்ட துணை நிலை ஆளுநர், அதை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில் கருணை மனு நிலுவையில் உள்ளதால் மரண தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என்ற குற்றவாளியின் கோரிக்கையை ஏற்க மறுத்த டெல்லி உயர்நீதி மன்றம், விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது.
இதை அடுத்து தூக்குத் தண்டனையை நிறைவேற்ற எடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து இன்று அறிக்கை தாக்கல் செய்ய திகார் நிர்வாகத்திற்கு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே குற்றவாளிகள் 4 பேரும் தூக்கு மேடை உள்ள திகார் சிறை எண் 3 ல் தனித்தனி செல்களில் அடைக்கப்பட்டுள்ளனர். நான்கு பேரின் மரண தண்டனையையும் ஒரே நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் எனபதால் இந்த ஏற்பாடு என தெரிவித்துள்ள அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இதனிடையே, குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்ற குறிப்புடன், மத்திய உள்துறை அமைச்சகம், அதை, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்துள்ளது. எனவே, குறிப்பிட்ட கருணை மனு எந்த நேரத்திலும் நிராகரிக்கப்பட்டு, நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் தூக்குத் தண்டடையும் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
Comments