நித்தியின் கைலாசவாசி நேபாள எல்லையில் பலி..! தாயிடம் உடலை ஒப்படைக்கவில்லை
நித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமத்தில் இருந்து கைலாசா செல்வதாக கூறிச்சென்ற சீடர் ஒருவர் நேபாள எல்லை அருகே மர்மமான முறையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கைலாசாவில் குதூகலமாக இருக்கலாம் என்ற ஆசையில் சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
கைலாசா... அனைத்து விதமான பாலியல் நடவடிக்கைகளுக்கும் தடையில்லை, விருப்பம் போல வாழலாம் என்று நித்தி கூறியதை உண்மை என்று நம்பி, அப்படி ஒரு நாடு இருக்கிறதா .. இல்லையா என்று கூட ஆராயாமல், கைலாசாவுக்கு பிரதம மந்திரி நான்... ராணுவ மந்திரி நான் என்று முண்டியடித்தவர்கள் பட்டியவர்கள் ஏராளம்..!
அந்த வகையில் கைலாசாவாசி என்று தன்னை கூறிக் கொண்டு நித்தியை நம்பி கைலாசாவுக்கு புறப்பட்ட நித்தியின் சீடர் ஒருவர் ஆதரவற்ற சடலமாக இந்திய நேபாளம் எல்லையில் கிடந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் ஆதின வாசியாக இருந்தவர் சதீஷ் செல்வகுமார் என்கிற ஸ்ரீ ஈஸ்வர பிரியானந்தா.. இவர் மா பிராணாபிரியாவின் முக்கியமான ஆதரவாளர்களில் ஒருவர்.
குஜராத்தில் உள்ள யோகினி பீட நடவடிக்கைகளில் முன்னிலை வகித்து வந்த இவர் குஜராத்தில் மா பிரணாபிரியாவின் வலது கரமாக செயல்பட்டுவந்தார். சதீஷ் செல்வகுமார் கடந்த சில வாரங்களாக குஜராத் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து நித்தியின் கைலாசாவிற்கு செல்ல இருப்பதாக கூறி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஆசிரமத்தில் இருந்து மாயமான சதீஷ் செல்வக்குமாரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக இருந்தது.
இந்த நிலையில் சதீஷ் செல்வக்குமார் இந்திய நேபாள எல்லைக்கு அருகே உள்ள பகுதியில் மர்மமான முறையில் இறந்து ஆதரவற்ற சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த நித்யானந்தாவின் சீடர்கள் மற்றும் பக்தர்கள், சதீஷ் செல்வக்குமார் உடலை பெற்று வாரணாசியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல் அங்கு வைத்து சதீஷ் செல்வக்குமாரின் உடலை வேகவேகமாக தானம் செய்ததாக கூறப்படுவதால் சதீஷ் செல்வகுமாரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.
சதீஷ் செல்வகுமார் பலியானது குறித்து தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நித்தியானந்தாவின் அறிவுறுத்தலின் பேரில் தான் சதீஷ் செல்வகுமாரின் சடலம் வேகமாக வேகமாக தகனம் செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்த நிலையில் நித்யானந்தாவின் குஜராத் ஆசிரமத்தில் இருந்து சதீஷ் செல்வகுமாரின் தாயார் வனஜா விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் வருகிற 18ம் தேதி சதீஷ் செல்வகுமாருக்கு காரியம் நடைபெற இருப்பதால் கலந்து கொள்ளுமாறு நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து தகவல் வந்ததாக வனஜா தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் நித்தியோ தனது கைலாசாவிற்கு அழைப்பு விடுத்து ஆங்கிலத்திலும், தமிழிழும் பிரசங்கம் செய்து வருகின்றார்.
நித்தியின் கனவு தீவான கைலாசாவின் முதல் பலி சதீஷ் செல்வக்குமார் என்ற நிலையில் மறைந்து வாழும் நித்தியை பிடிக்க 2019 ஆம் ஆண்டை போலவே 2020 ஆம் ஆண்டிலும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்..!
Comments