இன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள்

0 2447

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள் இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மக்களால் மிகவும் நேசிக்கப்படும் ஒரு நடிகராகவும் தலைவராகவும் திகழ்ந்த எம்ஜிஆர் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை காண்போம்....

ஒரு நடிகராக எம்ஜிஆர் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். வடக்கே இருந்து வந்த ஜாம்பவான்களான ராஜேஷ்கன்னாவும் திலீப்குமாரும் கூட எம்ஜிஆர் படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட போது அவரைப் போல நடிக்க முடியாது என ஒப்புக் கொண்டார்கள்.

சுறுசுறுப்பு, உற்சாகம், நடனம், சண்டைப் பயிற்சி, கொள்கை, ஏழைகள் மீது கருணை, தொழிலாளர்கள் மீது மரியாதை, தாய் மீதான பக்தி, நாட்டின் மீதும் மக்கள் மீதுமான ஈடுபாடு போன்ற எம்ஜிஆரின் பாத்திர வார்ப்புகள் மிக எளிதாக மக்களை வசீகரித்தன. பல லட்சக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் வாழ வைத்த எம்ஜிஆரின் திரைப்படங்கள் இன்றும் விரும்பி பார்க்கப்படுகின்றன.

அரசியலில் பேரறிஞர் அண்ணா காலம் தொட்டே ஈடுபாட்டுடன் இருந்த எம்ஜிஆர், ஒருகட்டத்தில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவை தொடங்கி வெற்றி மீது வெற்றிகளை குவித்து முதலமைச்சராக 13 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தார். ஏழைகளின் பசியை நன்கு அறிந்த எம்ஜிஆர் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து பல லட்சம் பேரின் வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றார்.

மனிதன் எத்தனை காலம் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை அறிந்தால் தோல்வி இல்லை என்று வாழ்ந்து காட்டியவர் எம்ஜிஆர். அவருக்கு இதுபோன்ற பல பிறந்தநாட்கள் இனியும் வரும். எப்போதும் மக்கள் அவரை கொண்டாடுவார்கள். அவர் காலத்தையே வென்றவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments