குழிக்குள் சிறுமி.. மீட்ட இளைஞர்கள்..! தங்கள் கையே உதவி..!

0 2015

புதுச்சேரி விழுப்புரம் எல்லையில் உள்ள சின்னபாபு சமுத்திரம் பகுதியில் வீடு கட்ட தோண்டப்பட்ட அஸ்திவார குழிக்குள் விழுந்த 3 வயது சிறுமியை இளைஞர்கள் பக்கத்தில் குழி தோண்டி பத்திரமாக மீட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

புதுச்சேரி - விழுப்புரம் மாவட்டம் எல்லையில் உள்ள சின்னபாபு சமுத்திரம் பகுதியை சேர்ந்த சரோஜா என்பவரின் நிலத்தில் அரசின் வீடு கட்டும் திட்ட பணிக்கு 7 அடி ஆழத்தில் போர்வெல் எந்திரத்தை கொண்டு ஒரு அடி சுற்றளவில் அஸ்திவார குழி அமைத்துள்ளனர். குழிக்குள் கான்கிரீட் கம்பிகளை அமைத்து தூண் கட்டுவதற்கு காலதாமதமானதால் அந்த குழிகள் அப்படியே இருந்துள்ளது.

அந்த நிலையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சரோஜாவின் மகளான 3 வயது சிறுமி ஒரு குழிக்குள் தவறி விழுந்துவிட்டாள். அவளது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். குழியின் மேல் புறமாக கையை விட்டு வெளியே தூக்கி விடலாம் என்றால் 2 1/2 அடி உயரம் உள்ள சிறுமியின் கை குழிக்குள் சிக்கிக் கொண்டதால் சிறுமியை மேலே தூக்க இயலவில்லை.

தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து விட்டு காத்திருக்காமல் அந்தபகுதி இளைஞர்கள் சிலர் தாங்களே மீட்பு பணியில் இறங்கினர்.

அந்த குழிக்கு பக்க வாட்டில் பொக்லைன் மூலம் ஒரு குழி ஒன்று தோண்டி விரைவாக அந்த அஸ்திவார குழிக்குள் தவித்த சிறுமியை 15 நிமிடங்களில் பத்திரமாக மீட்டுள்ளனர்

சமூக வலைதளங்களில் பரவும் இந்த வீடியோவில் இளைஞர்களின் வேகத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. அதே நேரத்தில் அந்த குழிக்குள் சிக்கிய சிறுமியை வேடிக்கை பார்க்கும் ஆவலில் திரண்ட கூட்டத்தின் அழுத்தத்தால் குழிக்குள் மண் சரிவு ஏற்பட்டிருந்தால் விபரீதம் நிகழ்ந்திருக்கும் என்கின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.

இது போன்ற தருணத்தில் பொதுமக்கள் குழிக்கு அருகில் பெரும் அளவில் கூடி இருந்து மண் சரிவை ஏற்படுத்தாமல் இருந்தாலே விரைவாக குழிக்குள் விழுந்தவர்கள் உயிருடன் மீட்க இயலும் என்று சுட்டிக்காட்டும் தீயணைப்பு வீரர்கள். இது அஸ்திவார குழி என்பதாலும் ஆழம் குறைவு என்பதாலும் இளைஞர்களின் வேகம் கை கொடுத்துள்ளது என்றும் போர்வெல் போன்ற ஆழமான குழிக்குள் இது போன்று யாரேனும் தவறி விழுந்தால் கூட்டத்தை அகற்றி விட்டு தக்க பாதுகாப்புடன் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.

திருச்சி அருகே போர்வெல் குழிக்குள் சிறுவன் சுஜீத் தவறி விழுந்து பலியான விவகாரத்தில் ஆரம்பத்தில் குழியைசுற்றி நின்றவர்களின் அழுத்தம் தாங்காமல் குழிக்குள் மண்சரிவு ஏற்பட்டதால் தான் மீட்பு பணியில் பெரும் பின்னடைவை உண்டாக்கியது.

விவரம் தெரிந்து கொள்வது அவசியம் தான் அதற்காக வேடிக்கையே விபரீதம் ஆகி விடக்கூடாது என்பதை கூட்டத்தில் முண்டியடிப்பவர்கள் இனியாவது உணர வேண்டும்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments