ஊர் தோறும் பொங்கல் விளையாட்டு...
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் விதவிதமான விளையாட்டு போட்டிகள் நடந்தன. ஊர்கள் தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தி இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. 70 கிலோ முதல் 100 கிலோ எடை கொண்ட இளவட்டக்கற்களை இளைஞர் ஆர்வத்துடன் தூக்கி வீசினர். பழம்பெரும் வீர விளையாடான இளவட்டக்கல் தூக்கும் போட்டியை அங்கிருந்தவர்கள் உற்சாகத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த ஊமாரெட்டியூரில் சேவல் சண்டை போட்டி நடைபெற்றது. உயர்நீதிமன்ற அனுமதி பெற்று பல்வேறு நிபந்தனைகளுடன் தமிழ்நாடு சண்டை சேவல் வளர்போர் சங்கம் சார்பில் 2வது ஆண்டாக போட்டி நடத்தப்படுகிறது. முதல் நாள் போட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்ட சண்டை சேவல்கள் களம் கண்டன.
இதே போன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த காவனூரில் சேவல் சண்டை போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்றது. எம்ஜிஆரின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் 500க்கும் மேற்பட்ட சேவல்கள் களம் இறக்கப்பட்டன.
கடலூர் மாவட்டம் பிச்சாவரத்தில் தமிழ்நாடு சுற்றுலா மையம் சார்பில் படகுப்போட்டி நடத்தப்பட்டது. சென்னை, கோவை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் சென்னையை சேர்ந்த ஹரிஷ் - ஞானம் ஜோடியினர் முதல் பரிசை தட்டிச் சென்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மாட்டு பொங்கலை முன்னிட்டு மாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டது. கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 ஆகிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது. அம்மனுக்கு 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை அணிவிக்கப்பட்டது. மொத்தம் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் மூலம் செய்திருந்த அலங்காரம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பனமடங்கி கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நடந்த எருது விடும் விழாவில் 180 காளைகள் பங்கேற்றன. இலக்கினை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Comments