பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை பிடித்து காரை பரிசாக வென்ற வீரர்

0 2790

மதுரை மாவட்டம் பாலமேட்டில் மாட்டுப்பொங்கலை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் நடைபெற்றது. வாடிவாசலை கடந்து பாய்ந்த காளைகளை, ஏராளமானவர்கள் அடக்கி பரிசுகளை தட்டிச் சென்றனர். 

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு திருவிழா புகழ் பெற்ற மாடுபிடி நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த ஆண்டுக்கான போட்டிக்காக காலை 6 மணி முதலே, ஜல்லிக்கட்டு நடைபெற்ற மஞ்சள்மலை சாமி ஆற்றுதிடலில் ஏராளமானவர்கள் திரளத் தொடங்கினர்.

போட்டிக்கு முன்னதாக காளைகளுக்கும், காளையர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான ஒருங்கிணைப்புக்குழு முன்பாக மாவட்ட கலெக்டர் வினய் உறுதிமொழி வாசிக்க, அதனை மாடுபிடி வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின. முதலில் போட்டியை நடத்தும் கிராம பொது மகாலிங்கசாமி மடத்துக் கமிட்டி சார்பில் கோவில் காளை களம் இறக்கப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை.

அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட 700 காளைகளும் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. அதனை வீரர்கள் பாய்ந்து பிடித்தனர். பதிவு செய்யப்பட்ட 936 வீரர்களில், ஒவ்வொரு சுற்றுக்கும் 75 பேர் வீதம் வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். ஒவ்வொரு முறை களமிறக்கப்படும் வீரர்களைத் தனியாகக் கண்டறிய பிரத்யேக டி ஷர்ட்டுகள் வழங்கப்பட்டன.

துள்ளிக்குதித்து வந்த காளைகளின் திமில்களை வீரர்கள் பாய்ந்து பிடித்தனர். அப்போது சில காளைகள் சுழன்று சுழன்று வந்தபோதும் திமிலை விடாத வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

இதேபோல் சில காளைகள் யாருக்கும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து நிற்காமல் சென்றன. இன்னும் சில காளைகள் களத்தில் நின்று காளையர்களை கலங்கடித்தன. இந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

காளைகள் வாடிவாசல் வழியாக வரும் முன்பே அது யாருடைய காளை, அதற்கான பரிசுப்பொருட்கள் என்ன என்பதும் அறிவிக்கப்பட்டன.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாணிக்கம் எம்.எல்.ஏ. உள்பட பலர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து ரசித்தனர். அவர்கள் அவ்வப்போது பரிசுகளை தங்கள் சொந்த செலவில் அறிவித்து காளைகளின் உரிமையாளர்களையும், காளையர்களையும் உற்சாகப்படுத்தினர். மேலும் ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்களை பெருமை படுத்தும் விதத்திலான நினைவுத்தூண் விரைவில் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

பல்வேறு வர்த்தக நிறுவனங்களின் சார்பிலும் பரிசுகள் வழங்கப்பட்டன. தங்கம், வெள்ளிக்காசுகள், சைக்கிள், அண்டா, கட்டில் என பல பரிசுகள் வழங்கப்பட்டன.

கலெக்டர் வினய், தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments