கே9 வஜ்ரா பீரங்கியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார் ராஜ்நாத்சிங்
எல் அண்ட் டி நிறுவனம் தயாரித்துள்ள கே 9 வஜ்ரா பீரங்கியை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
இந்திய ராணுவத்திற்கு கே 9 வஜ்ரா டி 155எம்எம் ரகத்தை சேர்ந்த 100 பீரங்கிகளை 42 மாதங்களில் தயாரித்து கொடுப்பதற்கான பணி ஆணைகளை எல் அண்ட் டி நிறுவனம் பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றிருந்தது. உள்நாட்டில் பொருட்கள் உற்பத்தி செய்யும் திட்டத்தின் கீழ் 4500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் செயல்பட்டு வரும் எல் அண்ட் டி நிறுவனத்தின் ஆயுத தயாரிப்பு பிரிவில் 51வது வஜ்ரா பீரங்கி தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு பீரங்கியில் ஸ்வஸ்திக் குறியீடு பதித்ததுடன், குங்குமம் வைத்து, தேங்காய் உடைந்தது வழிபாடு நடத்தினார்.
பின்னர் வஜ்ரா பீரங்கியை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அந்த பீரங்கியில் அமர்ந்து சிறிது தூரம் அவர் பயணித்தார்.
50 டன் எடை கொண்ட கொண்ட கே 9 வஜ்ரா பீரங்கி, 47 கிலோ குண்டுகளை வெடிக்கும் திறன் கொண்டது. 43 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது. இருக்கும் இடத்தில் இருந்தே நகராமல் திருப்பவும் முடியும்.
நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத்சிங், உள்நாட்டில் தயாரிக்கும் திட்டத்திற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த பீரங்கி என்றார். பாதுகாப்பு துறை சார்ந்த பொருட்களை உள்நாட்டில் தயாரிப்பதில் இருக்கும் அனைத்து தடைகளையும் அரசு நீக்கும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
அதற்கான உரிமம் வழங்குவதற்கான நடைமுறைகளை அரசு எளிதாக்கி இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் ராஜ்நாத்சிங், எதிர்காலத்தில் ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் விதத்தில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
Comments