திருச்சி மாவட்டத்திலும்.. களைகட்டிய ஜல்லிக்கட்டு..!
திருச்சி மாவட்டம் சூரியூரிலும் இன்று ஜல்லிக் கட்டுப் போட்டி நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிகட்டு போட்டி இன்று சூரியூரில் நடைபெற்றது. 600 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். கால்நடை மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் தகுதியுடைய காளைகளும், உரிய உடல் தகுதி பரிசோதனைக்குப் பிறகு மாடுபிடி வீரர்களும் அனுமதிக்கப்பட்டனர்.
முதலில் கோவில் காளையான இளைய காசி, ஊர் மக்கள் சூழ மேளதாளங்களுடன் அழைத்துவரப்பட்டு அவித்துவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மற்ற காளைகள் அவித்து விடப்பட்டன.
மாடுபிடி வீரர்கள் 5 குழுக்களாக களம் இறங்கினர். மஞ்சள், பிங்க், சிவப்பு, ஊதா, நீலம் ஆகிய வண்ணங்களில் சீருடைகள் அணிந்த வீரர்கள் மாடுகளைப் பிடித்தனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மாடு பிடிபடாமல் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், அண்டா, தங்க, வெள்ளி நாணயங்கள், ரொக்கப் பரிசுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
மாடுகள் முட்டி 3 மாடுபிடி வீரர்கள் உட்பட 14 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் ஒரு பெண் உட்பட 5 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் ஜல்லிக்கட்டுப் போட்டியை ரசித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Comments