பிசிசிஐயின் ஒப்பந்த பட்டியலில் இருந்து தோனி நீக்கம்...
பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்தண்டிற்கான கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலில், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய அணியின் முக்கிய வீரர்களை, நான்கு பிரிவுகளாக பிரித்து பிசிசிஐ அவர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும். அதில் ஏ ப்ளஸ் பிரிவு வீரர்களுக்கு 7 கோடி ரூபாய், ஏ பிரிவு வீரர்களுக்கு 5 கோடி ரூபாய், பி பிரிவு வீரர்களுக்கு 3 கோடி ரூபாய், சி பிரிவு வீரர்களுக்கு 1 கோடி ரூபாயும் சம்பளமாக கொடுக்கப்படும்.
அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், தோனியின் பெயர் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. இது எதிர்காலத்தில் இந்தியா அணிக்காக தோனி களம் இறங்குவாரா என்பதில் பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
ஏழு கோடி ரூபாய் ஊதியம் பெறும் ஏ ப்ளஸ் பிரிவில் கேப்டன் கோலி, ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 5 கோடி ரூபாய் ஊதியம் பெறும் ஏ பிரிவில் கே.எல் ராகுல், ஷிகர் தவான், அஸ்வின், ஜடேஜா உள்ளிட்ட பதினோறு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஹர்திக் பாண்ட்யா, சாஹல் உள்ளிட்ட 5 வீரர்கள் 3 கோடி ரூபாய் ஊதியம் பெறும் பி பிரிவிலும், கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே உள்ளிட்ட 8 வீரர்கள் 1 கோடி ரூபாய் ஊதியம் பெறும் சி பிரிவிலும் ஒப்பந்தமாகியுள்ளனர்.
Comments