நிர்பயா வழக்கு: 22ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா?

0 1345

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவது தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு, திஹார் சிறை நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திட்டமிட்டபடி வரும் 22ஆம் தேதியே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்பது குறித்து நாளை தெரியவரும்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி 22ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. ஆனால், குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங், கருணை காட்டுமாறு குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளான். இந்த கருணைமனுவை நிராகரிக்குமாறு பரிந்துரைத்து டெல்லி மாநில அரசு, துணை நிலை ஆளுநருக்கு அனுப்பியது.

இந்த கருணை மனுவை நிராகரிக்குமாறு பரிந்துரைத்து, டெல்லி துணை நிலை ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அதை அனுப்பியுள்ளார். தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ள கருணை மனு, குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, அதன் மீது ராம்நாத் கோவிந்த் முடிவெடுப்பார். இதனிடையே, கருணை மனு தாக்கல் செய்திருப்பதால், திட்டமிட்டபடி குற்றவாளிகள் வரும் 22ஆம் தேதி தூக்கில் போடப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருணை மனு போட்டிருப்பதால் தூக்கு வாரண்ட்டை ரத்து செய்ய முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று கைவிரித்துவிட்டது. இந்நிலையில், நிர்பயா பாலியல் வன்முறை வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், தூக்கு தண்டனையை 22ஆம் தேதி நிறைவேற்றுவது பற்றி இன்று பிற்பகலில் விசாரணை நடத்தியது.

தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த நிலை அறிக்கையை நாளை தாக்கல் செய்யுமாறு திஹார் சிறை நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, கருணை மனு விவகாரம் முடியும் வரை தூக்கு தண்டனை தேதியை ஒத்திவைக்குமாறு டெல்லி மாநில அரசுக்கு திஹார் சிறை நிர்வாகம் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments