மாட்டுப்பொங்கல் உற்சாக கொண்டாட்டம்..!
உழவுக்கும், விவசாயிகளுக்கும் உறுதுணையாக விளங்கும் காளைகளையும், பசுக்களையும் போற்றி வணங்கும் வகையில், மாட்டுப்பொங்கல் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
சேலம்
சேலத்தில் கன்னங்குறிச்சி, புது ஏரி, அடிக்கரை, செட்டிச்சாவடி, மன்னார்பாளையம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாட்டுப்பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மாடுகளை நீராட்டி அலங்கரித்து, வண்ணப்பொடிகளை தூவி, கொம்புகளை அலங்கரித்தும், புதிய தாம்புக்கயிறு கட்டி பூஜை செய்து, பொங்கல், செங்கரும்பு, வாழைப்பழங்கள் வழங்கியும் வணங்கினார்கள்.
சென்னை
மாட்டுப் பொங்கலையொட்டி சென்னை தியாகராயநகர் கோ சாலையில் உள்ள பசுக்களுக்கு அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அகத்திக்கீரை, அருகம்புல் வாழைப்பழம் போன்றவை வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பசுக்களுக்கு உணவு வழங்கி வழிபட்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் உள்ள கோகிருபா கோசாலையில், பசுக்களை குளிப்பாட்டி வண்ணம் பூசி மாலை அணிவித்தும், புதுப்பானையில் பொங்கல் வைத்து படைத்து சிறப்பு பூஜை செய்தும் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூர் அருகே குலசை முத்தாரம்மன் கோசாலையில் மாட்டுப்பொங்கலையொட்டி கோ பூஜை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. அங்குள்ள 100 க்கு மேற்பட்ட பசுக்களை நீராட்டி, சந்தனம், குங்குமம், மஞ்சள், இளநீர், பால், பன்னீர் உள்ளிட்ட பதினாறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்து கோ பூஜை நடைபெற்றது. பின்னர் பொங்கலிட்டு மாடுகளுக்கு படையலிட்டு வழிபட்டனர்.
சேலம்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள செட்டிப்பட்டியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்தும், பொங்கல் படையலிட்டு சுற்றி வந்து வழிபாடு நடத்தி கொண்டாடினர்.
கரூர்
கரூர் அருகே மாட்டுப்பொங்கலையொட்டி, கோவில் மாடுகளை வணங்கி வழிபட்டு, மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்மங்களத்தை அடுத்த காளிபாளையம் கிராமத்தில், காணிக்கையாக வழங்கிய கோவில் மாடுகளை அலங்கரித்து பூஜை செய்து, அதன் காலில் ஆண்களும், பெண்களும் 9 முறை விழுந்து வணங்கினர்.
தொடர்ந்து அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தியும், மேடையில் ஏற்றி இறக்கியும் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரி அருகேயுள்ள சர்வதேச நகரமான ஆரோவில் பகுதியில், வெளிநாட்டு ஆண்களும் பெண்களும் தமிழர்களின் கலாச்சாரப்படி பொங்கல் பண்டிகையை உற்சாகம் பொங்க கொண்டாடினார்கள். இதற்காக மாட்டு வண்டியில் பயணம் செய்து வந்த வெளிநாட்டவர்களை, தமிழ் பெண்கள் குங்கும பொட்டிட்டு வரவேற்றனர். பின்னர் வேஷ்டி மற்ரும் சேலைகள் கட்டி, அனைவரும் ஒன்றாக கூடி அமர்ந்து, விறகு அடுப்பில் தீ மூட்டி, மண்பாண்டங்களில் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என குரல் எழுப்பி கொண்டாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து உரியடித்தல், கயிறு இழுத்தல், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இதில் வெளிநாட்டவர்களுடன் உள்ளூர் மக்களும் கலந்து கொண்டு கொண்டாடினார்கள்.
கோவை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில், யானைகள் நலவாழ்வு முகாமில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பவானி ஆற்றில் யானைகளை நீராட்டி, முகாமில் உள்ள விநாயகர் கோவிலில் பட்டு வஸ்திரங்கள் அணிவித்து அலங்கரித்து, அர்ச்சகர்கள் மூலம் கஜ பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து பொங்கல் வைத்து, பொங்கி வந்த போது யானைகள் பிளிரி சத்தமிட்டு மகிழ்ந்தன. யானைகளுக்கு சர்க்கரை பொங்கல் ,கரும்பு, வாழைப் பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதில் அப்பகுதி மக்களுடன் சுற்றுலா பயணிகளும் பங்கேற்றனர்.
வேலூர்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பனமடங்கி கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நடந்த எருது விடும் விழாவில், சுமார் 180 காளைகள் பங்கேற்றன. இலக்கினை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு, முதல் பரிசு ரூபாய் 65 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூபாய் 55 ஆயிரம், என மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் காயம் அடைந்த 5 பேர் மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
கும்பகோணம்
கும்பகோணம் அருகேயுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தானத்தில் உள்ள கோசாலையில் 500 க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு கோ பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பசுக்களுக்கு வஸ்திரம் அணிவித்து, மலர் தூவி தீபாராதனை செய்து வழிபட்டனர். இதில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த பக்தர்களும் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தர்பார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள சந்தோஷ் திரையரங்கு வளாகத்தில், ரஜினி மக்கள் மன்றத்தினர், குடும்பத்துடன் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இதையொட்டி இன்று ஒரு நாள் முழுவதும், 4 காட்சிகளும் அனைவரும் இலவசமாக தர்பார் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
தேனி
தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபால சுவாமி கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு பட்டத்துக் காளைக்கு, படையலிட்டு ஏராளமானோர் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கோசாலையில் உள்ள பசுக்களுக்கு கரும்பு வழங்கி வணங்கினர்.
இதில் கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச்சேர்ந்த ஏராளமாணோர் திரண்டதால் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Comments