திருக்குறளுக்கு கதை எழுதிய.. ஐ.பி.எஸ் அதிகாரி
திருக்குறளுக்கு கதை வடிவில் பொருள் எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ள சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு, நிகழ்ச்சியில் அடுக்கு மொழியில் பேசி அசத்தினார்.
சென்னை காவல் துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் ஐபிஎஸ் அதிகாரி திருநாவுக்கரசு, எழுதிய 'குரல் அமுது கதை அமுது' என்கிற புத்தகமும் அவரது மனைவி லாவண்யா சோபனா எழுதிய 'காக்கிசட்டை அப்பா' என்கிற புத்தகமும் புத்தகக் கண்காட்சியில் இன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி, நல்லி குப்புசாமி, நடிகர் தாமு, ஆன்மீக பேச்சாளர் சுகி சிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சுகி சிவம், காவல்துறையில் எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் உருவாகி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். விவேகானந்தரின் துறவு பற்றி பேசிய அவர், நித்தியானந்தாவின் கைலாஷா, திருவள்ளுவருக்கு காவி உடை போன்றவை குறித்து தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் பேசி கலகலப்பூட்டினார்.
தொடர்ந்து பேசிய காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், காவல்துறையினரை நல்ல விசயங்களுக்காக பாராட்டவில்லை என்றாலும் யாரும் குறை கூறி விடக்கூடாது என்பதே தங்களின் எதிர்பார்ப்பு என்று தெரிவித்தார். தனக்கும் காக்கிச்சட்டை அப்பா இருந்தார் என்றும், தானும் ஒரு காக்கிசட்டை அப்பாவாக இருப்பதால், தனுஷ்கோடி லாவண்யா ஷோபனா எழுதிய 'காக்கிச்சட்டை அப்பா' என்கிற புத்தகத்தை வெளியிட தனக்கு தகுதி இருப்பதாக எண்ணுகிறேன் என்று கூறினார்.
பின்னர், துணை ஆணையர் திருநாவுக்கரசு ஏற்புரை வழங்கி பேசும் போது, அடுக்கு மொழியில் பேசி அனைவரையும் அசரவைத்தார்.
Comments